இந்தியா

மகாராஷ்டிரத்திலிருந்து குஜராத் வருவோருக்கு கரோனா பரிசோதனைச் சான்று கட்டாயம்

25th Mar 2021 04:35 AM

ADVERTISEMENT

 

ஆமதாபாத்: மகாராஷ்டிரத்தில் இருந்து குஜராத் மாநிலத்துக்குச் செல்வோர், 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்படட கரோனா தொற்று பாதிப்பில்லை என்ற கரோனா பரிசோதனைச் சான்று (ஆர்டி- பிசிஆர்) கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குஜராத் மாநில சுகாதாரத் துறை துணைச் செயலாளர் வனராஜ்சிங் பதியார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: 
கடந்த ஒரு வாரமாக குஜராத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்த விசாரணையில், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் மகாராஷ்டிரத்தில் இருந்து வந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. எனவே,  மகாராஷ்டிரத்திலிருந்து குஜராத் மாநிலத்துக்குள் நுழையும் மக்கள் கட்டாயம் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 
மேலும், மகாராஷ்டிரத்தில் இருந்து வருவோர் கரோனா பரிசோதனை மேற்கொண்ட 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கரோனா பரிசோதனைச் சான்று வைத்துள்ளவர்கள் மட்டுமே குஜராத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையின் அறிக்கையின்படி, மார்ச் 23-ஆம் தேதி மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,33,026 ஆக இருந்தது. ஒரு நாளில் 28,699 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குஜராத் மாநிலத்தில்  செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,730 பேராக அதிகரித்திருப்பதாகவும், மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,90,679-ஆக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT