கொல்கத்தா: ஓட்டுக் கேட்க வரும் பாஜகவினரை விரட்டியடிக்க வீட்டு உபயோகப் பொருட்களுடன் தயாராக இருங்கள் என்று தனது கட்சித் தொண்டர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா அறிவுரை கூறியுள்ளார்.
திங்களன்று மேற்கு வங்கத்தின் பங்குரா மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பேரணியில் பங்கேற்ற பின்னர் பேசிய மம்தா கூறியதாவது:
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது நமது தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட்கள், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட எத்தனையோ போலி வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது. ஆனால் எதையுமே அவர்களால் நிறைவேற்ற முடியாது. பாஜக குண்டர்கள் உங்களைத் தேடி ஓட்டுக் கேட்க வருவார்கள். அவர்களை விரட்டியடிக்க வீட்டு உபயோகப் பொருட்களுடன் தயாராக இருங்கள்.
மேற்கு வங்கத்தில் பாஜகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளன. நான் பாஜகவைப் பற்றிப் பேச விரும்பவில்லை. என்னை காப்பியடி க்க மட்டுமே அவர்களுக்குத் தெரியும்.
குஜராத்தில் ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு எப்படி மோடி பெயர் வைக்கப்பட்டது என்பதைப் பார்த்திருப்பீர்கள். ஒருநாள் அவர்கள் இந்த நாட்டின் பெயரையும் மாற்றி விடுவார்கள்.
நாம் எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடுல்பூர் , சோம்கைத்தலா ஆகிய பகுதிகளில் வன்முறையினைக் கட்டவிழ்த்து விட்டது. தற்போது பாஜகவும் அதனையே செய்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.