இந்தியா

கரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் - இன்று!

22nd Mar 2021 11:50 AM

ADVERTISEMENT

கரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த ஆண்டில் நாட்டில் முதன்முதலாக ஊரடங்கை நடைமுறைப்படுத்தத் தொடங்கிய நாள் இன்று.

2019 டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் வூஹானில் தோன்றிய கரோனா வைரஸ் தொற்று, 2020 ஜனவரி மாத இறுதியில் இந்தியாவுக்குள் நுழைந்தது. கேரளத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுதான் இந்தியாவில் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு என்று கூறப்படுகிறது. 

இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வந்தது. 

இதுகுறித்து முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி 2020 மார்ச் 19 ஆம் தேதி(வியாழக்கிழமை) நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் 14 மணி நேர பொது ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

ADVERTISEMENT

அதாவது மார்ச் 22 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் மாலை நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் தீபமேற்றி கரோனா வைரஸை விரட்ட ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்தார். 

மேலும் இந்த பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு மனத் துணிவும், சமூக அளவிலான கட்டுப்பாடும், ஒற்றுமையும் தேவை என்றார். 

அது இந்தியாவில் கரோனா பரவலின் 3 ஆவது வாரம். 3 ஆவது வாரத்தில் கரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்றும் சமூகப் பரவலாக மாறினால் எதிர்கொள்வது கடினம் என்றும் கூறப்பட்டது.

மேலும், பொது இடங்களில் கரோனா வைரஸ் 12 மணி நேரம் மட்டுமே உயிர்ப்போடு இருக்கும். நாம் 14 மணி நேரம் வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தால் வைரஸ் அழிந்துவிடும் என்றெல்லாம் கூறப்பட்டது. எனினும் தற்போது வரை கரோனா வைரஸ் தொற்று நம்மை விட்டபாடில்லை என்பது வேறு. 

அவ்வாறு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அரசின் வலியுறுத்தலுக்கு ஏற்ப, கரோனா தொற்றுக்கு எதிராக நாட்டு  மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருந்த முதல் நாள் இன்று. இந்திய மக்கள் இதுவரை சந்தித்திராத நாள் இன்று. 

14 மணி நேர ஊரடங்கில் அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கின. எல்லைகள் மூடப்பட்டன. மருத்துவமனைகள், தீயணைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டும் செயல்பாட்டில் இருந்தன. 14 மணி நேர ஊரடங்கை மக்கள் ஒற்றுமையுடன் கடைப்பிடித்தனர்.

அதன்பின்னர் மார்ச் 24 ஆம் தேதி இரவு 8 மணியளவில் மக்களிடம் இரண்டாம் முறையாக கரோனா தொற்று குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகக் கூறினார். அன்றிரவே (மார்ச் 24) நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றார். 

அதேநேரத்தில் அத்தியாவசியப் பணிகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தங்கள் சேவையை புரிய அனுமதி வழங்கப்பட்டது. 

இவ்வாறு தொடங்கிய முதல் ஊரடங்கு தற்போது வரை தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஓரளவு இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியது. பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் மீண்டும் செயல்படத் துவங்கின. நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. மாநிலங்களுக்கு இடையே, மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து சேவை சீரடைந்தது.

இவ்வாறு கடந்த ஓரிரு மாதங்களாக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த அதேநேரத்தில், கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில்  கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மீண்டும் பொது முடக்கத்துக்கு வழிவகுத்து வரலாறு திரும்பிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT