இந்தியா

கோவிஷீல்டு 2-வது தடுப்பூசி போடும் காலத்தை நீட்டிக்க மத்திய அரசு அறிவுரை

22nd Mar 2021 03:47 PM

ADVERTISEMENT


புது தில்லி: கரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டவர்களுக்கு, இரண்டாவது டோஸ் போடுவதற்கான கால அவகாசத்தை 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

விஞ்ஞான ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு கொவிட்-19 தொற்றுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை மாற்றி அமைக்குமாறு தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழுவும், கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழுவும் தனது 20 ஆவது கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளன.

இதன்படி கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள 4-6 வார இடைவெளியை 4-8 வாரமாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும், கோவாக்சின் தடுப்பூசிக்கு அல்ல.

ADVERTISEMENT

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழு, கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு ஆகியவற்றின் பரிந்துரையை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை பரிந்துரைக்கப்பட்டுள்ள 4 - 8 வாரங்களுக்குள் செலுத்துமாறும் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 6-8 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால் அதன் பாதுகாப்பு அதிகரிப்பதாகவும், அதேவேளையில் 8 வாரங்களுக்குப் பிறகு வழங்கப்படக்கூடாது என்றும் தற்போதைய அறிவியல் ஆதாரங்களில் தெரியவந்துள்ளது.

இந்த அறிவிப்பை கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பயனாளிகள், தடுப்பூசிகளை வழங்குபவர்கள் போன்றவர்களுக்கு தெரிவிப்பதற்கான விரிவான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்துமாறும் மத்திய சுகாதாரச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
 

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடுவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு 4 முதல் 6 வாரங்கள் என்று பரிந்துரைத்திருந்த நிலையில், தமிழகத்தில் 4 வார இடைவெளியில் இரண்டாவது டோஸ் போடப்பட்டு வந்தது என்று தெரிவித்துள்ளார்.
 

 

Tags : coronavirus vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT