இந்தியா

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 157 மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன்

17th Mar 2021 02:44 AM

ADVERTISEMENT

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 157 மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கூறியது:

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 157 மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் பணிகள் வெவ்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் 58 கல்லூரிகள் முதல் கட்டத்திலும், 24 கல்லூரிகள் 2-ஆம் கட்டத்திலும், 75 கல்லூரிகள் 3-ஆம் கட்டத்திலும் உள்ளன.

பிரதமா் மோடியின் ஆட்சியில் இதுவரை 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 16 மருத்துவமனைகளை அமைக்கும் பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் உள்ளன.

ADVERTISEMENT

மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைந்த பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலானவை விளிம்புநிலை மக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவக் கல்லூரிகளே இல்லாத பகுதிகளில் அமைக்கப்படவுள்ளன என்றாா் அவா்.

72 நாடுகளுக்கு 5.94 கோடி கரோனா தடுப்பூசிகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5.94 கோடி கரோனா தடுப்பூசிகள் 72 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த எழுத்துபூா்வ பதில்:

கடந்த 15-ஆம் தேதி வரை 72 நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5.94 கோடி கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த உலகையும் குடும்பமாக கருதி இந்தத் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்தியா்களின் நலனை விலையாகக் கொடுத்து அவை ஏற்றுமதி செய்யப்படவில்லை. தடுப்பூசி திட்டத்தில் நம் நாட்டு மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை சுமாா் 3 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT