கயா: பிகாரில் பாதுகாப்புப் படைகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மண்டல கமாண்டர் உள்ளிட்ட 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிகாரின் கயா மாவட்டத்தில் உள்ள துமாரியா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மன்பார் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, சி.ஆர்.பி.எப் படைப்பிரிவின் 205 கோப்ரா படையணி, துணை ராணுவப் படைப்பிரிவின் உள்ளூர் அணியினர் மற்றும் காவல்துறையினர் சேந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மண்டல கமாண்டர் உள்ளிட்ட 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மரணமடைந்தவர்களில் மாவோயிஸ்ட்களின் மண்டல கமாண்டர் அம்ரேஷ் பக்தாவும் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ளவர்கள் மண்டல துணை கமாண்டர்களான ஸுவ்பூஜன், ஸ்ரீகாந்த் பையின் மற்றும் உதய பஸ்வான் என்று காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து மூன்று ஏ.கே 47 ரக துப்பாக்கிகளும் , ஒரு இன்சா ரக ரைபிளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சி.ஆர்.பி.எப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.