இந்தியா

முன்னாள் காங். மகளிர் அணி தலைவர் தனித்துப் போட்டி

16th Mar 2021 06:18 AM

ADVERTISEMENT


திருவனந்தபுரம்/கொச்சி: கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாததையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவர் லத்திகா சுபாஷ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். 

பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். 

கேரள பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-இல் தேர்தல் நடைபெறுகிறது. அதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு லத்திகா சுபாஷுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை மொட்டையடித்து காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.  

இந்நிலையில், காங்கிரஸிலிருந்து விலகுவதாக லத்திகா சுபாஷ் திங்கள்கிழமை அறிவித்தார். தனது விலகல் கடிதத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனுக்கும் அவர் அனுப்பியுள்ளார். 

ADVERTISEMENT

அக்கடிதத்தில், "மகளிர் அணியையும் அதன் உறுப்பினர்களின் மனநிலையையும் காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ளவில்லை. மகளிர் அணியைச் சேர்ந்த யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் எங்களுக்கு எதிராக சிலர் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார். 

கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஏற்றுமானூர் பேரவைத் தொகுதியில் தனித்துப் போட்டியிட உள்ளதாக லத்திகா சுபாஷ் அறிவித்துள்ளார். 

சமாதான முயற்சி: பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர், வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவதற்காக வயநாடு, கண்ணூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மூத்த தலைவர்களை காங்கிரஸ் கட்சி அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT