இந்தியா

ஊழல் செய்வதிலேயே குறியாக இருந்த காங்கிரஸார்: ஜெ.பி.நட்டா 

16th Mar 2021 06:11 AM

ADVERTISEMENT


தாகுகானா (அஸ்ஸாம்): கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் செய்வதிலேயே குறியாக இருந்தனர் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா புகார் கூறினார்.

அஸ்ஸாமில் மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 என மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 126 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இத் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

தாகுகானா பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசாரப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணியில் கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:

அண்மையில் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா வதேரா. அப்போது, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஐந்தாண்டுகளில் ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து, தேயிலைத் தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம் ரூ .365 ஆக உயர்வு, வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 வருமான உதவி என 5 வாக்குறுதிகளை அளித்துள்ளார். தற்போது அஸ்ஸாமுக்கு வரும் பல காங்கிரஸ் தலைவர்களும் இந்த 5 வாக்குறுதிகள் குறித்துப் பேசுகின்றனர்.

ADVERTISEMENT

ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்தக் கட்சியால் ஊழலுக்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்க முடியும். அக்கட்சியினர் "கமிஷன்' பெறுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் செய்வதிலேயே குறியாக இருந்தனர்.

ஆனால், அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில், வளர்ச்சிக்குத் தடையாக இருந்த பல விஷயங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. சாலைகள் செப்பனிடப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள் நான்குவழிச் சாலைகளாகவும், ஆறுவழிச் சாலைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை, தனது தீவிர நடவடிக்கைகள் மூலம் தேசிய நீரோட்டத்தில் இணையச் செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, அஸ்ஸாம் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. முதல்வர் சர்வானந்த சோனோவால் தலைமையிலான பாஜக அரசு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நிலுவையில் உள்ள பணிகளையும் அரசு செய்து தரும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம் என்றார் ஜெ.பி.நட்டா.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT