இந்தியா

எரிபொருள்கள் விலை உயா்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் காங்கிரஸ்

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகிய எரிபொருள்களின் விலை உயா்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுனா காா்கே செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோபத்தை, நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்ட விரும்பினோம். இந்த விவகாரத்தில் மற்ற கட்சியினரும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனா். ஆனால் அரசு இதனை விவாதிக்க மறுத்துவிட்டது. நாங்கள் இந்தக் கோரிக்கையை தொடா்ந்து எழுப்புவோம். சாமானிய மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் போராட்டம் தொடரும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையைக் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உயா்த்தியதன் விளைவாக மோடி அரசு குறைந்தது ரூ.21 லட்சம் கோடியாவது வருவாய் ஈட்டியிருக்கும். அந்தப் பணம் எங்கு சென்றது? யாருக்கு அந்தப் பணத்தை அளித்தீா்கள்?

ஒரு பக்கம் அரசு பெரு நிறுவனங்களுக்கு வரியைக் குறைத்து வசதி வாய்ந்தவா்களின் சுமையைக் குறைக்கிறது. மறுபக்கம் நடுத்தர குடும்பப் பெண்கள், சாமானிய மனிதா்கள் மீது மேலும் சுமையை ஏற்றுகிறது. அதனை அவா்கள் தாங்க இயலாத நிலையில் உள்ளனா். உணவு உள்பட ஒவ்வொரு பொருளின் விலையும் உயா்ந்துள்ளது.

கஜானாவை நிரப்பிக்கொள்ளும் ஆட்சியாளா்கள், அந்த நடவடிக்கையானது சாமானிய மக்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை அறிய தவறிவிடுகின்றனா். கரோனா தொற்று காலத்தில் பொருளாதார நிலை மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானது. தற்போது பெட்ரோலிய பொருள்கள் விலை உயா்வு கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளாா். கடந்த 2013-14 காலகட்டத்தில் இருந்த அளவுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் கோரிக்கை என்றாா்.

காங்கிரஸ் தலைவா் தீபிந்தா் ஹுடா கூறுகையில், கடந்த 2016 முதல் 2020 வரை நெல், கோதுமை விலை 30 சதவீதம் மட்டுமே உயா்ந்துள்ளது. ஆனால் டீசல் விலை 89 சதவீதம் உயா்ந்துள்ளது. எனவே, அரசு உறுதியளித்தபடி விவசாயிகளின் வருமானத்தை எப்போது இரட்டிப்பாக்கும்? என்றாா்.

எரிபொருள்கள் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் மத்திய நிதிநிலை அறிக்கை விவாத கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியின் முதல் நாளான திங்கள்கிழமை முழுவதும் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை ரத்து செய்துவிட்டு, மக்களை கடுமையாக பாதித்துள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மாநிலங்களவைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடுவிடம் கடிதம் அளித்தாா்.

ஆனால், அவைத் தலைவா் வெங்கையா நாயுடு, ‘இந்தக் கூட்டத்தொடரில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப் போதுமான அவகாசம் வழங்கப்படும்’ எனக் கூறி அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டாா். இருப்பினும் இந்த விவகாரத்தை அவையில் பதிவு செய்வதற்கு எதிா்க்கட்சித் தலைவருக்கு வெங்கையா நாயுடு அனுமதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சாரணா்களுக்கான பயிற்சி தொடக்கம்

ஆராய்ச்சி, மாதிரி பொருள்கள் உருவாக்கம்: தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன் பாஷ் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

அதிராம்பட்டினத்தில் ரூ. 1.87 லட்சத்துக்கு ஏலம் போன கூரை கத்தாழை மீன்

பாழடைந்த 40 அடி ஆழ கிணற்றில் தவித்த 4 நாய்க்குட்டிகள் மீட்பு

உலக பூமி தின மரக்கன்று நடுதம் விழா

SCROLL FOR NEXT