இந்தியா

 காங்கிரஸ் கரைந்த கதை!

DIN



நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், சுதந்திரம் பெற்ற பிறகும் காங்கிரஸ் கட்சி மட்டுமே அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. இத்தகைய சக்தியை தமிழகத்தில் கட்சி தொடங்கிய 18-ஆவது ஆண்டில் வீழ்த்திக் காட்டியது திமுக. 
1952-இல் சென்னை மாகாணத்துக்கு நடைபெற்ற முதல் தேர்தலில் 367 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 152 இடங்களைக் கைப்பற்றி மைனாரிட்டி ஆட்சி அமைத்தது. பிறகு காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையை ஏற்படுத்திக் கொண்டது என்பது தனிக்கதை.

 1957-இல் 204 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 151 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. 1962}இல் 206 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 139 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. 

அதுவரை ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட காங்கிரஸýக்கு, 1967 தேர்தல் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தமிழகத் தேர்தல்களில் திருப்புமுனை தேர்தலாகவும் அமைந்தது. இந்தத் தேர்தலில்தான் தமிழகத்துக்கு 234 தொகுதிகள் என இறுதி செய்யப்பட்டது.

மொத்தம் 232 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸôல் 51 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. முதல்வர் வேட்பாளர் காமராஜரே, மொழிப்போர் போராட்டத்தை நடத்திய மாணவர் சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார். 174 இடங்களில் போட்டியிட்ட திமுக 137 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. முதல்வராக அண்ணா பதவியேற்றார்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸýக்கு 41.10  சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இந்தத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸýக்கு தொடர்ந்து இறங்குமுகம்தான். 1971-இல்  காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் கட்சி 15 இடங்களை மட்டுமே கைப்பற்றியது (34.99 சதவீத வாக்குகள்). 1977}இல் 198 இடங்களில் போட்டியிட்டு 27 தொகுதிகளைக் கைப்பற்றியது காங்கிரஸ் (17.50 சதவீத வாக்குகள்). இந்தத் தேர்தலில்தான், அதிமுக-வைத் தொடங்கி போட்டியிட்ட எம்ஜிஆர் முதல்வரானார். 

இதன் பிறகு, 1980-இல் திமுக-வுடன் கூட்டணியில் இணைந்து முதன்முறையாக 114 இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ் (இந்திரா காங்கிரஸ்). இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு 112, காங்கிரஸýக்கு 114 என்ற அடிப்படையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால்,114 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் 31 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது (20.92 சதவீத வாக்குகள்). 112 இடங்களில் போட்டியிட்ட திமுக-வுக்கு 37 இடங்கள் கிடைத்தன. இந்தத் தேர்தலில் அதிமுக 177 தொகுதிகளில் போட்டியிட்டு, 129 தொகுதிகளைக் கைப்பற்றியது. எம்ஜிஆர் மீண்டும் முதல்வரானார்.

1980}இல் திமுக-வுடன் கூட்டணியில் இணைந்த காங்கிரஸ், 1984-இல் அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்தது. காங்கிரஸுக்கு 73 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. இதில், 61 தொகுதிகளில் வெற்றி பெற்றது காங்கிரஸ் (16.28 சதவீத வாக்குகள்).

1989}ஆம் ஆண்டு தேர்தல் களம் வித்தியாசமாக அமைந்தது. தமிழகத்தில் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல் இது. 1967-இல் இழந்த ஆட்சியை மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தனித்துக் களம் கண்டது. 

முதன்முறையாக நான்கு முனைப்போட்டி உருவானது. திமுக, காங்கிரஸ், அதிமுக ஜெயலலிதா அணி, அதிமுக ஜானகி அணி எனக் கட்சிகள் பிரிந்து களம் கண்டன. காங்கிரûஸ வெற்றி பெறச் செய்ய தமிழகத்துக்கு 14 முறை விஜயம் செய்து பிரசாரம் செய்தார் ராஜீவ் காந்தி.  இருப்பினும், 214 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்கள் மட்டுமே கிடைத்தன (19.83 சதவீத வாக்குகள்).

ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பிறகு அதிமுக-வுடன் இணைந்து 1991 தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ். இந்தத் தேர்தலில் அதிமுக-வுக்கு 168 இடங்கள், காங்கிரஸýக்கு 65 இடங்கள், சோஷலிஸ்ட் காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடம்  என ஒப்பந்தம் கையெழுத்தானது. 65 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 60 தொகுதிகளைக் கைப்பற்றியது (15.19 சதவீத வாக்குகள்). 

1996  தேர்தலிலும் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. ஆனால், அதிமுக-வின் மீது அப்போது இருந்த அதிருப்தி காரணமாக தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) எனும் தனிக்கட்சியை தொடங்கி திமுக-வுடன் கூட்டணி அமைத்தார் ஜி.கே. மூப்பனார்.

அதிமுக கூட்டணியில் 64 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. 5.61 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. 40 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா 39 தொகுதிகளை வென்றது (9.30 சதவீத வாக்குகள்).

2001-இல் அதிமுக-வுடன் தமாகா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே கூட்டணி சேர்ந்தன. இதில், தமாகா-வுக்கு 32 இடங்களையும், காங்கிரஸýக்கு 14 இடங்களையும் ஒதுக்கியது அதிமுக. போட்டியிட்ட 14 இடங்களில் 7 இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ் (2.48 சதவீத வாக்குகள்). 32 இடங்களில் போட்டியிட்ட தமாகா 23 இடங்களைக் கைப்பற்றியது (6.73 சதவீத வாக்குகள்). 

2006-இல் திமுக கூட்டணியில் இடம்பெற்றது காங்கிரஸ் (தமாகா-வும் காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்டது). இந்த முறை காங்கிரஸýக்கு 48 இடங்களை ஒதுக்கியது திமுக. இதில், 34 இடங்களில் வெற்றி பெற்றது (8.38 சதவீத வாக்குகள்).

2011-இல் திமுக கூட்டணியில் தொடர்ந்த காங்கிரஸýக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், வெறும் 5 தொகுதியை மட்டுமே காங்கிரஸôல் கைப்பற்ற முடிந்தது (9.30 சதவீத வாக்குகள்).

2016 பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் நீடித்த காங்கிரஸýக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது காங்கிரஸ் (6.42 சதவீத வாக்குகள்). 

தற்போது (2021) நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக-விடம் இருந்து 25 தொகுதிகளைப் போராடிப் பெற்றுள்ளது காங்கிரஸ். கூட்டணி என்ற முடிவுக்கு வந்த பிறகு திமுக, அதிமுக என இரு கட்சிகளின் முதுகிலும் மாறி, மாறி அமர்ந்து தேர்தல் சவாரி மேற்கொண்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த காங்கிரஸýக்கு, இப்போது வழங்கப்பட்டுள்ள 25 தொகுதிகள் என்பது பெரிதும் மகிழ்ச்சியை அளிக்காவிட்டாலும், சற்றே ஆறுதலை அளித்துள்ளது. கண்கள் இருந்தால் கண்ணீர் வரும் என தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறிக் கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர்.

காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்துக் கொண்டிருந்த காங்கிரஸôர், இப்போது பாஜக-வை தமிழகத்தில் நுழைய விடக் கூடாது என்பது மட்டுமே இலக்கு என்று மனதை திடப்படுத்திக் கொள்கின்றனர். சமூக நீதிக்கு எதிராக இருக்கும் சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இப்போதுள்ள இலக்கு. 

தமிழகத்தில் பாஜக கால் பதிக்கக் கூடாது. அதற்காகவே இந்தத்தேர்தலில் பணியாற்றுகிறோம். வருங்காலத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க முயற்சிப்போம். 200 தொகுதிகளில் போட்டியிடும் நிலை வரக் கூடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியிருப்பதே காங்கிரஸôருக்கு தற்போதைய ஆறுதலாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT