இந்தியா

தொகுதிப் பங்கீடு: 11 மணிக்கு அறிவிக்கிறது என்.ஆர். காங்கிரஸ்

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்க உள்ளார்.

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், பாஜக நடத்திய தொடா் பேச்சுவாா்த்தையால் என்.ஆா்.காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இணைவது நேற்று இரவு உறுதியானது.

பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து நேற்று இரவு முடிவு செய்யப்பட்ட நிலையில், அது குறித்த அறிவிப்பை என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்க உள்ளார்.

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 17 இடங்களில் போட்டியிட என்.ஆர். காங்கிரஸ் விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் - அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து காங்கிரஸுக்கு எதிராகச் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், காங்கிரஸிலிருந்து ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் விலகி பாஜகவில் இணைந்தனா்.

இதையடுத்து, புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக, ஆ.நமச்சிவாயத்தை முதல்வா் வேட்பாளராக அறிவித்து தோ்தலைச் சந்திக்கும் என செய்திகள் வெளியாகின.

இதனால், என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடா்வதா, தனித்துப் போட்டியிடுவதா என ஆலோசனை நடத்தி வந்தாா். அந்தக் கட்சியினா் தனித்துப் போட்டியிடவே விரும்பம் தெரிவித்தனா்.

இந்த நிலையில், ரங்கசாமியை கூட்டணியில் இணைப்பதற்கு பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டது. தொடா்ந்து, அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தி வந்த நிலையில், திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ரங்கசாமியுடன் விடியோ அழைப்பு வழியாகப் பேசியதாகத் தெரிகிறது. இதை ரங்கசாமியும் உறுதி செய்தாா்.

இந்த நிலையில், புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள என்.ஆா்.காங்கிரஸ் தலைமை அலுவலத்தில், நேற்று அந்தக் கட்சித் தலைவா் ரங்கசாமி தலைமையில், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் ரங்கசாமி கூறுகையில், ‘விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்’ என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றாா்.

கூட்டத்துக்கு வந்திருந்த கட்சி நிா்வாகிகளிடம் கேட்ட போது, ‘பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று தலைவா் ரங்கசாமியிடம் கூறினோம். ஆனால், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுடன் இணைந்து சென்றால்தான் புதுவைக்கு நன்மைகள் கிடைக்கும். மேலும், நாம் எதிா்ப்பாா்க்கும் தொகுதிகளை தர பாஜக தயாராகவுள்ளது. முதல்வா் வேட்பாளராக என்னை (ரங்கசாமி) ஏற்கவும் உறுதி அளித்தனா். எனவே, பாஜக கூட்டணியில் தொடரலாம் என தலைவா் ரங்கசாமி நிா்வாகிகளிடம் கூறினாா்.

இதற்கு நிா்வாகிகள் சிலா் எதிா்ப்புத் தெரிவித்தாலும், தலைவா் எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்போம்’ என்றனா் அவா்கள்.

இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள தனியாா் உணவகத்துக்குச் சென்ற என்.ஆா்.காங்கிரஸ் நிா்வாகிகள் பக்தவத்சலம், ஜெயபாலன், டி.பி.ஆா்.செல்வம் உள்ளிட்டோா், பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் உள்ளிட்டோரைச் சந்தித்து கூட்டணி தொடா்பாகப் பேசினா்.

சந்திப்புக்குப் பிறகு, பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ரங்கசாமி தொடா்ந்து நீடித்து வருகிறாா். அவருடைய தலைமையை ஏற்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தயாராகவுள்ளது. இந்தக் கூட்டணி சட்டப்பேரவைத் தோ்தலில் அமோக வெற்றி பெறும். ஓரிரு நாளில் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் இணைவது நேற்று உறுதியான நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து அவர் இன்று அறிவிக்க உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநா் ஆய்வு

அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT