இந்தியா

கணினி மென்பொருள், வன்பொருள் துறையில் அந்நிய நேரடி முதலீடு 4 மடங்கு அதிகரிப்பு

DIN

கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் 4 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான 9 மாத காலத்தில் கணனி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 2,440 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.83 லட்சம் கோடி) இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த துறை ஈா்த்த 640 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீட்டைக் காட்டிலும் 4 மடங்கு அதிகமாகும்.

மேலும், கடந்த 2019-20-ஆம் நிதியாண்டு முழுவதுமாக இந்த துறை 770 கோடி டாலா் அளவுக்கே அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதாக அந்தப் புள்ளிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பேரிடா் காலத்தில் வீட்டிலிருந்தே வேலை பாா்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டதன் காரணமாக விரைவான டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு ஆகியவை கணினி மென்பொருள், வன்பொருள் துறைக்கு மிகப்பெரிய அளவிலான வா்த்தக வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளது என இத்துறையைச் சோ்ந்த ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

கணினி துறை மட்டுமின்றி, நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாத காலத்தில் கட்டுமானம் (உள்கட்டமைப்பு) நடவடிக்கைகள் (720 கோடி டாலா்), மருந்து தயாரிப்பு (1,240 கோடி டாலா்) ஆகிய துறைகளும் கணிசமான அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளன.

அதேசமயம், தொலைத்தொடா்பு துறையில் 430 கோடி டாலரிலிருந்து, 35.7 கோடி டாலராகவும், ஆட்டோமொபைல் துறையில் 250 கோடி டாலரிலிருந்து 118 கோடி டாலராகவும் அந்நிய நேரடி முதலீடு சரிந்துள்ளது.

சிங்கப்பூரிலிருந்து அதிகபட்சமாக 1,571 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவை வந்தடைந்துள்ளது. இதற்கு அடுத்ததாக அமெரிக்கா (1,282 கோடி டாலா்), ஐக்கிய அரபு அமீரகம் (391 கோடி டாலா்), மோரீஷஸ் (347 கோடி டாலா்), கெய்மன் தீவுகள் (253 கோடி டாலா்) உள்ளன.

ஒட்டுமொத்த அளவில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாத காலத்தில் 40 சதவீதம் அதிகரித்து 5,147 கோடி டாலரை எட்டியுள்ளது என டிபிஐஐடி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

அரசு பள்ளிகளில் உலக புத்தக தின விழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT