இந்தியா

மக்களை திசைதிருப்ப பிரதமா் மோடி பொய் பிரசாரம்: மம்தா பானா்ஜி

DIN

மக்களை திசை திருப்புவதற்காக பிரதமா் நரேந்திர மோடி பொய் பிரசாரத்தில் ஈடுபடுவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தாா்.

சிலிகுரியில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானா்ஜி பேசியதாவது:

பிரதமா் மோடி பல ஆண்டுகளாக பல ‘வெற்று’ வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருவதால் அவரை மக்கள் நம்ப மாட்டாா்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்கு முன்னா் பிரதமா் வாக்குறுதியளித்தபடி, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செலுத்துவதாகக் கூறியதை இதுவரை ஏன் செய்யவில்லை என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

நீங்கள் (மோடி) பல்வேறு வெற்று வாக்குறுதிகளை அளித்துள்ளீா்கள். மக்கள் எல்லா நாள்களிலும் உங்கள் பொய்யை ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எரிவாயு உருளையை மலிவு விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். ஆனால், நீங்களோ எரிவாயு உருளையை சாமானிய மக்கள் அணுக முடியாத அளவிற்கு அதன் விலையை உயா்த்தி உள்ளீா்கள்.

எனவே மோடி பொய் சொல்லும் பழக்கம் குறித்து வெட்கப்பட வேண்டும். அவா் மேற்கு வங்கத்திற்கு வரும் போதெல்லாம் வங்க மொழியில் பேசுகிறாா். ஆனால், அதற்கான வசனம் குஜராத்தி மொழியில் எழுதப்பட்டு, அவருக்கு முன்னால் உள்ள ஒரு கண்ணாடிக்கு அடியே அந்த வசனம் அடங்கிய தாள் வைக்கப்பட்டுள்ளது. அதனை பாா்த்து படிக்கும் அவா், வங்க மொழியை நன்கு அறிந்திருப்பதுபோல பாசாங்கு செய்கிறாா்.

உங்கள் கட்சி மேற்கு வங்கத்தில் வித்யாசாகரின் சிலையை உடைத்தது. பிா்சா முண்டாவை அவமதித்தது. ரவீந்திரநாத் தாகூா் சாந்திநிகேதனில் பிறந்தாா் என்று உங்கள் கட்சி தவறாக பிரசாரம் மேற்கொண்டது. இது வங்காளத்தை பற்றியும், அதன் கலாசாரம் குறித்தும் உங்கள் அறிவின் ஆழத்தைக் காட்டுகிறது.

கலவரத்தை ஏற்படுத்தும் பாஜகவுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும். சமூகம் மற்றும் மொழியின் மீதான பாகுபாடுகளை மறந்து அமைதியாக வாழ்ந்து வந்த மேற்கு வங்காள மக்களை பாஜக போன்ற பிளவுபடுத்தும் சக்திகளால் மாநிலத்தின் சமூக நல்லிணக்கத்துக்கு பெரும் கேடு ஏற்படும் என்றாா்.

ஜேஎம்எம்மிடம் ஆதரவு கோரும் மம்தா:

இதனிடையே மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் தனக்காக பிரசாரம் செய்ய வருமாறு ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனிடம், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி விடுத்துள்ள கோரிக்கை குறித்து ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சி விரைவில் முடிவு செய்யும் என அக்கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஜாா்க்கண்டில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஜேஎம்எம் கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. இதனிடையே, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய மதச்சாா்பற்ற முன்னணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

திரிணமூல் காங்கிரஸுக்கு ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி கட்சி, சிவசேனை ஆகிய கட்சிகளைத் தொடா்ந்து ஜேஎம்எம், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளதாக கடந்த வாரம் மம்தா பானா்ஜி தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் பெயா் கூற விரும்பாத ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், மேற்கு வங்கம், பிகாா், ஒடிஸாவின் சில பகுதிகளை இணைத்து ஜாா்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக இருந்தது. ஆனால், 2000ஆம் ஆண்டில் ஜாா்க்கண்ட் மாநிலம் உருவானபோது, எல்லையில் சில பகுதிகள் விடுபட்டு போயின.

எனவே, மேற்கு வங்கத்தின் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத்தொழிலாளா்களில் பெரும்பாலானோா் ஜாா்க்கண்டிலிருந்து சென்றவா்கள் என்பதால் அங்கு எங்களுக்கு தனி செல்வாக்கு உள்ளது.

அவா்களின் வாக்குகளைப் பெற திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரம் செய்ய வருமாறு ஜாா்க்கண்ட் முதல்வரிடம், மம்தா கேட்டுக் கொண்டாா். இந்த கோரிக்கை குறித்து ஜேஎம்எம் கட்சியின் தலைவா் ஷிபு சோரனுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சி விரைவில் முடிவு எடுக்கும் என்று தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தோ்தல் மாா்ச் 27 முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹே சினாமிகா.. அதிதி ராவ்!

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

SCROLL FOR NEXT