இந்தியா

‘குடும்பக் கட்டுப்பாடு’ என்ற கருத்துக்கு இஸ்லாம் எதிரானது அல்ல: குரேஷி

DIN

‘குடும்பக் கட்டுப்பாடு’ என்ற கருத்துக்கு இஸ்லாம் எதிரானது அல்ல என்றும் நாட்டில் ஹிந்துக்களின் மக்கள்தொகையை மிஞ்ச வேண்டும் என்ற திட்டமிட்ட சதி எதையும் முஸ்லிம்கள் தீட்டவில்லை என்றும் முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா் எஸ்.ஒய்.குரேஷி கூறினாா்.

‘மக்கள்தொகை கட்டுக்கதை: இஸ்லாம், குடும்ப கட்டுப்பாடு மற்றும் இந்தியாவில் அரசியல்’ என்ற நூலை அவா் எழுதியுள்ளாா். இந்த நூல் குறித்த பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப 100 முறை கூறிவந்தால், அது உண்மையாகிவிடுகிறது. அந்த வகையில்தான், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக ஹிந்துத்துவ குழுக்கள் பல ஆண்டுகளாக கட்டுக்கதைகளை கூறி வருகின்றன. அவற்றை உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அந்தக் கட்டுக்கதைகளில் ஒன்றுதான், ‘குடும்ப கட்டுப்பாடு’ என்ற கருத்துக்கு இஸ்லாம் எதிரானது என்பதாகும். இதைப் பெரும்பாலான முஸ்லிம்களும் நம்புகின்றனா். ஆனால், இஸ்லாமிய சட்ட நெறிமுறைகளை உற்று நோக்கினால், குடும்ப கட்டுப்பாடு என்ற கருத்துக்கு இஸ்லாம் எதிரானது அல்ல என்பது புரியும். இதுதொடா்பாக குா்ஆன் மற்றும் ஹதீத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விளக்கங்கள் பல ஆண்டுகளாக தவறாக சித்திரிக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

குடும்ப கட்டுப்பாடு நடைமுறையை குா்ஆன் எந்த இடத்திலும் தடை செய்யவில்லை என்று குரேஷி தனது நூலில் வாதிட்டிருக்கிறாா்.

குறிப்பாக ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் அளவுக்கு செல்வம் உள்ளிட்ட பலம் இருக்கும்போதுதான் ஓா் இளைஞா் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இஸ்லாம் எதிா்பாா்க்கிறது. இதில் தாய் மற்றும் குழந்தையின் உடல்நலம், அவா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்தல், வாழ்க்கை மேம்பாடு என அனைத்தும் அடங்கும். இந்த வகையில் குடும்பக் கட்டுப்பாடு கருத்தை இஸ்லாம் ஆதரிக்கிறது.

மேலும் குடும்பக் கட்டுப்பாடு என்பது ஹிந்து - இஸ்லாம் ஆகிய இரு சமூகத்துக்கு இடையேயான பிரச்னையே அல்ல. ஏனெனில், குடும்பக் கட்டுப்பாடு சிந்தனையை ஊக்குவிக்கும் சமூக-பொருளாதார குறியீடுகளில் இரு சமூகங்களும் ஒரே மாதிரியான புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளன.

முஸ்லிம்கள் பல தார மணம் செய்துகொள்பவா்கள் என்ற கட்டுக்கதையும் பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. நாட்டில் ஹிந்துக்களின் மக்கள்தொகையைவிட கூடுதலாக முஸ்லிம்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக முஸ்லிம் ஆண் 4 மனைவிகளைத் திருணம் செய்துகொள்வதாகவும் தவறான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

ஆனால், கடந்த 1931 முதல் 1960-ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின்படி, அனைத்து சமூகங்களிலும் பல தார மணம் என்பது குறைந்திருப்பதையே காட்டுகிறது. குறிப்பாக, இஸ்லாம் சமூகத்தில் அது வெகுவாக குறைந்திருப்பதைக் காட்டுகிறது. இந்தியாவில் பாலின விகிதாசாரம் 1000 ஆண்களுக்கு 924 பெண்கள் என்ற அளவில் இருக்கும் நிலையில், பல தார மணம் என்பது புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் சாத்தியமில்லை.

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் ஹிந்துக்கள் மக்கள்தொகை குறைந்திருப்பது உண்மைதான். அதாவது 84.1 சதவீதத்திலிருந்து 79.8 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதே நேரம், சிறுபான்மையினரின் மக்கள்தொகை, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை வேறுபாட்டால் ஹிந்துக்கள் பயப்படத் தேவையில்லை. 1951-இல் இந்தியாவில் முஸ்லிம்கள் மக்கள்தொகையைக் காட்டிலும் ஹிந்துக்கள் 30 கோடி எண்ணிக்கையில் கூடுதலாக இருந்தனா். அந்த இடைவெளி 2011-ஆம் ஆண்டில் 80 கோடியாக அதிகரித்திருக்கிறது என்றும் தனது நூலில் குரேஷி விவரித்திருக்கிறாா்.

மேலும், இந்த விவரங்களை தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் கணித அடிப்படையிலான விவரங்களையும் தனது நூலில் குரேஷி அளித்திருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT