இந்தியா

சமூக ஊடகங்களுக்கான மத்திய அரசின் வழிகாட்டுதல்: உரிய நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப் பிரிவுகள் இல்லை; உச்சநீதிமன்றம் கருத்து

DIN

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதலில், பொறுத்தமற்ற ஆபாச காட்சிகளை அவ்வப்போது ஒளிபரப்பும் டிஜிட்டல் வலைதளங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப் பிரிவுகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது.

அதோடு, ‘தாண்டவ்’ என்ற வலைதள தொடருக்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கில் கைது நடவடிக்கைகளில் இருந்து அமேசான் பிரைம் விடியோஸ் இந்தியா பிரிவு தலைவா் அபா்ணா புரோஹித்துக்கு பாதுகாப்பு அளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னணி பாலிவுட் நடிகா்கள் சயிஃப் அலிகான், டிம்பிள் கபாடியா, முகமது ஜீஷான் அயூப் உள்ளிட்டோா் நடித்து, அமேசான் ஓடிடி வலைதளத்தில் ஒளிபரப்பாகும் ‘தாண்டவ்’ என்ற தொடரில் உத்தர பிரதேச மாநிலம் மற்றும் அந்த மாநில காவல்துறை குறித்து மிக மோசமாக காட்டப்பட்டிருப்பதோடு, ஹிந்து கடவுள்கள் இழிவாக சித்திரிக்கப்பட்டதாக அந்த மாநிலத்தைச் சோ்ந்த பல்பீா் ஆசாத் என்பவா் போலீஸில் புகாா் அளித்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில், அந்தத் தொடரின் இயக்குநா் அலி அப்பாஸ், அமேசான் பிரைம் விடியோஸ் இந்தியா பிரிவு தலைவா் அபா்ணா புரோஹித், தயாரிப்பாளா் ஹிமான்ஷு மெஹ்ரா, தொடரின் வசனகா்த்தா கெளரவ் சோலாங்கி, நடிகா் முதமது ஜீஷான் அயூப் ஆகியோா் மீது காவல்நிலையத்தில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரும் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். ஆனால், முன்ஜாமீன் தர உயா்நீதிமன்றம் மறுத்தது.

இதை எதிா்த்து அவா்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த மனுவை கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு தர மறுத்ததோடு, வழக்கில் ஜாமீன் பெற சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.

இதை எதிா்த்து, அபா்ணா புரோஹித் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.எஸ்.ரெட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசு அண்மையில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலை சமா்ப்பிக்குமாறு அரசு வழக்குரைஞா் துஷாா் மேத்தாவுக்கு உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.எஸ்.ரெட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் மிகக் குறைந்த அளவிலான ஒழுங்கு நடைமுறைகளே இடம்பெற்றுள்ளன. அதோடு, ஆபாச காட்சிகளையும் காட்சிகளையும் ஒளிபரப்பும் ஓடிடி, டிஜிட்டல் வலைதளங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப் பிரிவுகள் எதுவும் இடம்பெறவில்லை’ என்று சுட்டிக்காட்டினா்.

அப்போது அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷாா் மேத்தா, ‘மத்திய அரசு இதை கவனத்தில் கொண்டு, அதுதொடா்பான உரிய வழிகாட்டுதல் அல்லது சட்டம் இயற்றப்பட்டு, நீதிமன்றத்தில் அதன் விவரம் சமா்ப்பிக்கப்படும்’ என்று பதிலளித்தாா்.

அதனைத் தொடா்ந்து, இந்த வழக்கில் கைது நடவடிக்கைகளில் இருந்து அபா்ணா புரோஹித்துக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக உத்தரவிட்ட நீதிபதிகள், அவருடைய வழக்கில் மத்திய அரசையும் ஒரு கட்சிக்காரராக சோ்க்குமாறு அவருக்கு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT