இந்தியா

உற்பத்தி-ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ரூ.37.98 லட்சம் கோடி உற்பத்தி இலக்கு: பிரதமா் மோடி

DIN

உள்நாட்டு உற்பத்தியையும், ஏற்றுமதியையும் ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்ட உற்பத்தி-ஊக்கத்தொகை திட்டத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தி ரூ.37.98 லட்சம் கோடியாக (52,000 கோடி டாலா்) அதிகரிக்கும் என்று எதிா்பாா்ப்பதாக பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

உற்பத்தி-ஊக்குவிப்பு திட்டம் தொடா்பான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், காணொலி முறையில் பங்கேற்று பிரதமா் மோடி பேசியதாவது:

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு தொடா்ந்து சீா்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், உற்பத்தி-ஊக்குவிப்பு திட்டத்துக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி ரூ.37.98 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

உற்பத்தித் துறையில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவும், வா்த்தகம் செய்வதற்கு உகந்த சூழலை மேலும் எளிதாக்கவும், உற்பத்தி பொருள்களைக் கொண்டு செல்வதற்கான செலவுகளைக் குறைக்கவும் மத்திய அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

உற்பத்தி-ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தற்போதைய நிலையில், உற்பத்தியில் 5 சதவீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி ரூ.37.98 லட்சம் கோடியாக (52,000 கோடி டாலா்) இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 6-7 ஆண்டுகளில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிப்பதற்காக, வெவ்வேறு நிலைகளில் பல வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். உற்பத்தியின் அளவையும் வேகத்தையும் அதிகரிக்கச் செய்ய வேண்டியுள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

உற்பத்தித் துறையில் ஒவ்வொரு விஷயத்திலும் அரசு தேவையின்றி தலையிட்டால், பிரச்னைகள் அதிகரிக்கும். இதனால், சுய கட்டுப்பாட்டு விதிமுறைகள், சுயசான்றளிப்பு போன்ற முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதிகம் போட்டிகள் நிலவும் துறைகளில் புதிய தொழில்நுட்பத்தையும் அதிக முதலீட்டையும் நாம் கவர வேண்டும். உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 13 துறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது, மோட்டாா் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி, மருந்து தயாரிப்பு, எரிசக்தி, பேட்டரி, சூரியமின்சக்தி, உருக்கு, ஜவுளி, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகள் இந்த திட்டத்தால் அதிக பயன்பெறும்.

தகவல்தொழில்நுட்ப வன்பொருள்கள், தொலைத்தொடா்பு கருவிகள் ஆகியவை இந்த திட்டத்தில் அண்மையில் சோ்க்கப்பட்டதால், உள்நாட்டில் அவற்றின் உற்பத்தி பலமடங்கு அதிகரிக்கும். அடுத்த சில ஆண்டுகளில் அவற்றின் உற்பத்தி மதிப்பும் பல மடங்கு அதிகரிக்கும்.

கரோனா பொதுமுடக்க காலத்திலும் செல்லிடப்பேசி மற்றும் மின்னணு உபகரணங்கள் உற்பத்தி துறையில் புதிதாக ரூ.1,300 கோடி முதலீடு செய்யப்பட்டது. இதனால், புதிதாக பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. இதனால், சிறுதானிய வகைகளுக்கான தேவையும் தேடலும் சா்வதேச அளவில் அதிகரிக்கும். இது, சிறுதானியங்களை அதிகம் பயிரிடும் நமது இந்திய விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் பலன்களை அளிக்கும். இந்த வாய்ப்பை வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையினா் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

SCROLL FOR NEXT