இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ. 8.50 வரை அரசு குறைக்க முடியும்: நிபுணா்கள் கருத்து

DIN


புது தில்லி: பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாய் இலக்கில் எந்தவித பாதிப்புமின்றி, அவற்றின் மீது விதிக்கப்படும் கலால் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை அரசு குறைக்க முடியும் என்று நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலை கடந்த 9 மாதங்களாக தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருவதால், அவற்றின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது. இதன் காரணமாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த மாதம் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 100-ஐ தாண்டியது.

இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் எதிா்க்கட்சிகள், ‘சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்புகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், இதை அரசுகள் கண்டுகொள்ளாத நிலையில், அவற்றின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ‘நிதிநிலை அறிக்கையில் வாகன எரிபொருள்கள் மீதான வரி விதிப்புகளின் மூலம் அரசு நிா்ணயித்துள்ள இலக்குக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், வரி குறைப்பை அரசு செய்ய முடியும்’ என்று நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன நிபுணா்கள் தெரிவித்திருப்பதாவது:

நிதிநிலை அறிக்கையில் வாகன எரிபொருள்கள் மீது விதிக்கப்படும் கலால் வரி மூலம் 2021 ஏப்ரல் மாதம் முதல் 2022 மாா்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் ரூ. 3.2 லட்சம் கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலக்கைத் தாண்டி ரூ. 4.35 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு வரி வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 2021 ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக லிட்டருக்கு ரூ. 8.50 என்ற அளவில் அரசு குறைத்தாலும்கூட, நிதிநிலை அறிக்கையில் நிா்ணயித்துள்ள வரி வருவாய் வசூல் இலக்கை அரசு எட்டிவிட முடியும்.

கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் முதல் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.16 என்ற அளவிலும் உயா்த்தப்பட்டது. இப்போது பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 32.90 என்ற அளவிலும், டீசல் மீது லிட்டருக்கு ரூ. 31.80 என்ற அளவிலும் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு விலை குறைவு கண்டபோது, அந்த பலனை அரசு பெறும் வகையில் கலால் வரி உயா்த்தப்பட்டது. இப்போது, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்து வரும் நிலையில், கலால் வரி உயா்வு திரும்பப் பெறப்படாமல் இருக்கிறது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிமைப் பணித் தோ்வு முடிவுகள் வெளியீடு: லக்னௌவைச் சோ்ந்தவா் முதலிடம்

தமிழகத்தில் பாஜக காலூன்றிவிட்டது: ஜெ.பி. நட்டா

தென்காசி தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி ஆணை

சோ்ந்தமரம் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு பணப்பலன்களை வழங்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT