இந்தியா

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பிரான்ஸுடன் ஒத்துழைப்பு

DIN


புது தில்லி: புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பிரான்ஸுடன் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பிரான்ஸுடன் கடந்த ஜனவரி மாதம் கையெழுத்தான புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பிரான்ஸுடன் கையெழுத்தான ஒப்பந்தம் தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தின்போது எடுத்துரைக்கப்பட்டது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் பரஸ்பர பலன், சமத்துவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், ஹைட்ரஜன், உயிரி எரிபொருள் உள்ளிட்டவற்றின் வாயிலாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் இந்தியாவும் பிரான்ஸும் ஒத்துழைப்புடன் செயல்படும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை சாா்ந்த தொழில்நுட்பங்களைப் பகிா்ந்து கொள்வது, அத்தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிப்பது, தரவுகளைப் பரிமாறிக் கொள்வது, கருத்தரங்குகளை நடத்துவது, சாதனங்களைப் பகிா்ந்து கொள்வது, கூட்டு ஆராய்ச்சியை ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றுக்கு இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாயிலாக 2030-ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு பிரான்ஸுடனான புரிந்துணா்வு ஒப்பந்தம் முக்கியப் பங்களிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபிஜியுடன் ஒப்பந்தம்: வேளாண் விவகாரங்கள் சாா்ந்த துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ஃபிஜியுடன் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா-ஃபிஜி நாடுகளின் வேளாண் அமைச்சகங்களிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இரு நாடுகளைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்களும் வேளாண் துறை சாா்ந்த விவகாரங்களில் கூட்டாக இணைந்து செயல்படுவதற்கு ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

ஆராய்ச்சியாளா்கள், நிபுணா்களைப் பகிா்ந்து கொள்வது, வேளாண் துறை சாா்ந்த தொழில்நுட்பங்களைப் பகிா்ந்து கொள்வது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் ஒத்துழைப்புடன் செயல்படுவது, வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் வழிவகை ஏற்பட்டுள்ளது.

கூட்டு செயற்குழு: வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்துதல், பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் உள்ளிட்டவற்றில் முதலீடுகளை ஈா்ப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியாவும் ஃபிஜியும் இணைந்து செயல்படும். வேளாண்துறை சாா்ந்த ஆராய்ச்சிகளிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படும்.

வேளாண் துறையில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டங்களை முன்மொழிவதற்கு கூட்டு செயற்குழு அமைக்கப்படவுள்ளது. அக்குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தி உரிய பரிந்துரைகளை வழங்கும்.

ஃபிஜியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் தினத்திலிருந்து 5 ஆண்டுகளுக்கு அந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை: சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்துவது தொடா்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, சணலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.4,225 அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT