இந்தியா

வீட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் சர்ச்சையில் சிக்கிய கர்நாடக அமைச்சர்

DIN

கரோனா தடுப்பூசியை வீட்டில் செலுத்திக் கொண்டதால் கர்நாடக மாநில வேளாண் துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மார்ச் 1-ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் தொடங்கியுள்ளது. ஹாவேரி மாவட்டம், ஹிரேகேரூரில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை 64 வயதான வேளாண் துறை அமைச்சர் பி.சி.பாட்டீல், தனது மனைவி வனஜாவுடன் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
 கரோனா தடுப்பூசியை அரசு மருத்துவமனைகள் அல்லது குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரப் பணியாளர்களை வீட்டுக்கு வரவழைத்து கரோனா தடுப்பூசியை அமைச்சர் பி.சி.பாட்டீலும், அவரது மனைவி வனஜாவும் செலுத்திக்கொண்டது தேசிய அளவில் பெரும் சர்ச்சைக்கு இடமளித்துள்ளது.
 இதுகுறித்து அமைச்சர் பி.சி.பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 "வீட்டில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டதில் என்ன தவறு இருக்கிறது? என்னைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர். ஒருவேளை தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்காக நான் மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும். அதனால் வீட்டிலேயே தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
 ஆனால், இந்த விவகாரத்தை ஏன் பெரிதாக்குகிறார்கள் என்று புரியவில்லை. நான் என்ன திருடிவிட்டேனா? வீட்டில் தடுப்பூசியை எடுத்துக் கொண்டது குற்றமா? இந்த விவகாரம் பெரிதாக்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு, பலரும் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வார்கள்' என்றார்.
 மேலும் தனது சுட்டுரையிலும் அமைச்சர் பி.சி.பாட்டீல் கூறியிருப்பதாவது:
 "ஹிரேகேரூரில் உள்ள எனது வீட்டில் அரசு மருத்துவர்களின் உதவியுடன் நானும், எனது மனைவியும் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பல நாடுகள் பாராட்டியுள்ள நிலையில், தடுப்பூசி குறித்து பலர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 கரோனா தடுப்பூசியை அமைச்சர் வீட்டிலேயே எடுத்துக்கொண்டது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.
 இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியதாவது:
 "கரோனா தடுப்பூசியை மருத்துவமனையில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அமைச்சர் பி.சி.பாட்டீலின் நடவடிக்கை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு அமைச்சர் பி.சி.பாட்டீலை மருத்துவர்கள் சம்மதிக்க வைத்திருக்க வேண்டும். முன் அனுமதி பெறாமல் யாருடைய வீட்டுக்கும் சென்று தடுப்பூசி செலுத்தக் கூடாது. வீட்டுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தியது தவறாகும். கரோனா தடுப்பூசியை வீடுகளில் செலுத்தக் கூடாது என்று மருத்துவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார்.
 இந்த விவகாரம் குறித்து முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:
 "எங்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டால் என்ன? வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ தடுப்பூசி எடுத்துக் கொள்வதுதான் முக்கியம். ஓரிரு நாள்களில் நானும் தடுப்பூசி எடுத்துக் கொள்வேன். வீட்டில் எடுத்துக் கொள்வதா, மருத்துவமனையில் எடுத்துக் கொள்வதா என்பது குறித்து விரைவில் முடிவு செய்வேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT