இந்தியா

மும்பையில் உள்ள வழக்குகளை சிம்லாவுக்கு மாற்றக் கோரி கங்கனா ரணாவத் உச்சநீதிமன்றத்தில் மனு

DIN

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், அவரது சகோதரி ரங்கோலி சண்டேல் ஆகியோர் தங்கள் மீது மும்பையில் நடைபெறும் அவதூறு வழக்குகளை சிம்லாவுக்கு மாற்றம் செய்து உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
 மகாராஷ்டிரத்தில் தன் மீது தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளில் சிவசேனை தலைவர்கள் ஈடுபடுவதாகவும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக அவரது வழக்குரைஞர் நீரஜ் சேகர் மூலம் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
 மும்பை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றால் எங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கும். மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமையிலான அரசு எங்களுக்கு எதிராகத் தொல்லைகள் கொடுத்து வருவதால் எங்களது உயிருக்கும், சொத்துகளுக்கும் அச்சுறுத்தல் இருக்கும். சிவசேனையின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் நாங்கள் துன்புறுத்தப்படுவோம். எங்களுக்கு எதிரான முதல் தகவலறிக்கை, பதிவு செய்யப்பட்ட புகார்களின் விசாரணையை ஹிமாசலுக்கு மாற்றல் செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 கடந்த ஆண்டு செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கங்கனா ரணாவத் பேட்டியளிக்கையில், "2016 இல் பாடலாசிரியர் ஜாவேத் அக்தருடனான சந்திப்பு' குறித்துத் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாவேத் அக்தர் அவதூறு வழக்கை கங்கனா மீது தொடர்ந்துள்ளார். ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கையும் ஹிமாசல பிரதேசம், சிம்லாவில் உள்ள ஒரு நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
 கங்கனா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி சண்டேல் அண்மையில் கரோனா காலத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக சுட்டுரையில் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார். இதுதொடர்பாக அளித்த புகாரின்பேரில் மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கையும் மாற்றல் செய்து உத்தரவிடக் கோரியுள்ளனர்.
 இதுபோன்ற ஒரு வழக்கு அந்தேரியில் உள்ள பெருநகர நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மீது உள்ளது என்றும், ஒரே செயலுக்கு பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருப்பது மனுதாரருக்குத் தொல்லை கொடுப்பதையே காட்டுகிறது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர்கள் இருவருக்கும் எதிராக மும்பையில் முனாவர் அலி என்பவரால் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தேச துரோகத்தில் ஈடுபட்டதாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையும் மாற்றல் செய்து உத்தரவிட வேண்டும்.
 அனைத்து வழக்குகளும் புகார்களும் மனுதாரர்களுக்குத் தொல்லை கொடுக்கும் கெட்ட நோக்கத்திலும் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் உள்ளதாகும்.
 மனுதாரர்கள் இந்திய நீதிமன்றங்களின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணையை சந்திக்கத் தயாராகவும் உள்ளனர். ஆனால், மும்பையில் வழக்கு விசாரணை நடைபெற்றால் அவர்களின் உயிருக்கும் சொத்துகளுக்கும் அச்சுறுத்தல் இருக்கும்.
 சிவசேனை தலைமையிலான மகாராஷ்டிர அரசு அவர்களுக்குத் தொல்லை கொடுக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மும்பை மாநகராட்சி நிர்வாகம் பாலி ஹில்லில் உள்ள கங்கனா ரணாவத்தின் வீட்டின் ஒரு பகுதியை இடித்தது. பின்னர், மாநகராட்சியின் நடவடிக்கை சட்ட விரோதமானது என்று கூறி மும்பை உயர்நீதிமன்றம் அதனைத் தடை செய்தது.
 மகாராஷ்டிர அரசின் இந்த நடவடிக்கைகள் மனுதாரர்களுக்கு எதிரான கெட்ட நோக்கங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன.
 மாறாக மனுதாரர்கள் வழக்கு விசாரணைக்காக மகாராஷ்டிரம் சென்றால் அங்கு அரசாலும், சிவசேனை கட்சியினராலும் தொடர் அச்சுறுத்தல் இருக்கும். மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் கங்கனா ரணாவத்துக்கு சிஆர்பிஎப் படையின் ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அவர்கள் மீதான வழக்கு விசாரணையை மும்பையில் இருந்து சிம்லாவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT