இந்தியா

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

DIN

பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருமளவில் அதிகரித்துள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட உச்சிமாநாட்டை, காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார் மன்மோகன் சிங். கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, கட்சியின் சார்பில் மாநில வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை வெளியிடும் வகையில், "பிரதீக்ஷா 2030' என்ற பெயரில் இந்த உச்சிமாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் மன்மோகன் சிங் பேசியதாவது:
 கடந்த 2016இல் மத்திய பாஜக அரசு பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டது. மிக மோசமானதாகக் கருதப்படும் இந்த நடவடிக்கையால் நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அமைப்புசாரா துறை குழப்பத்தில் உள்ளது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருமளவில் அதிகரித்துள்ளது.
 கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அதிகப்படியான கடன் வாங்க வேண்டியிருப்பதால், பொது நிதி அமைப்பு சீர்குலைந்து வருகிறது. இது எதிர்கால வரவு-செலவுத் திட்டங்களில் தாங்க முடியாத சுமையை உருவாக்கும்.
 கேரளத்தில் சமூகத் தரம் உயர்வான நிலையில் உள்ளபோது, எதிர்காலத்தில் அதிக கவனம் தேவைப்படும் பிற துறைகளும் உள்ளன. மாநில அரசு பல தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது. பல பணிகளில் டிஜிட்டல் முறை அதிகரிப்பு காரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் பாதிப்பு ஏற்படக்கூடும். கேரளத்தில் சுற்றுலாத் துறை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாத் துறைக்கு மேலும் பாதிப்பு ஏற்படலாம்.
 உடல் நலம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்தியதன் காரணமாக, நாட்டின் பிற பகுதிகளிலும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் கேரள மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள், அங்கிருந்து கேரளத்துக்கு பெருமளவில் பணம் அனுப்புகின்றனர். இதன் மூலம் மாநிலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற சேவைத் துறைகளின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் உள்ளது.
 கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், "நியாய்' நிதியுதவி போன்ற கருத்துகளை இணைத்துள்ளனர். இது பாராட்டுக்குரியது. 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்ட இத் திட்டம் ஏழைகளுக்கு நேரடியாக பயனை அளிக்கும். வறியவர்களின் தேவைகளை மையமாகக் கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கட்டமைப்பை இது வழங்கும். காங்கிரஸ் சித்தாந்தத்தின் சாராம்சம் இது. ஐக்கிய ஜனநாயக முன்னணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இது பற்றி ஒரே மாதிரியாக சிந்திப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.
 ஏழைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இதுபோன்ற திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமையும். குறிப்பாக, சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறையிலும், வேளாண் துறையிலும், அமைப்புசாரா துறையிலும் அதிக உற்பத்திக்கு வழிவகுக்கும். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தேசிய அளவில் நீடித்த மந்தநிலைக்குப் பின்னர் பொருளாதாரம் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்ப உதவும் என்றார் மன்மோகன் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

SCROLL FOR NEXT