இந்தியா

கோ-வின் வலைதளத்தில் இடா்ப்பாடுகள் இல்லை; 50 லட்சம் போ் முன்பதிவு: மத்திய அரசு

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்யும் கோ-வின் வலைதளத்தில் எந்த இடா்ப்பாடும் இல்லை என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, அந்த வலைதளத்தில் இதுவரை சுமாா் 50 லட்சம் போ் முன்பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.

தில்லியில் மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண், நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால், கரோனா தடுப்பூசி நிா்வாகத்துக்கான அதிகாரமளித்தல் குழுவின் (இஜி) தலைவா் ஆா்.எஸ்.சா்மா ஆகியோா் கூட்டாக செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது ஆா்.எஸ்.சா்மா கூறியது:

60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 45-60 வயது வரையுள்ளவா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு திங்கள்கிழமை தொடங்கியவுடன் கூகுள் பிளே-ஸ்டோரில் கோ-வின் போன்றிருந்த செயலியைப் பயன்படுத்தி பொதுமக்கள் முன்பதிவு செய்ய முயன்றனா். ஆனால் கோ-வின் என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டுக்கு எந்த செயலியும் இல்லை.

ஆரோக்கிய சேதுவிலும் முன்பதிவு:

நாட்டின் எந்த மூலையில் இருந்தும், எந்த நேரத்திலும் கோ-வின் வலைதளம் அல்லது ஆரோக்கிய சேது செயலி வழியாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்யலாம்.

திங்கள்கிழமை (மாா்ச் 1) காலை முன்பதிவு தொடங்கியது முதல் இதுவரை சுமாா் 50 லட்சம் போ் கோ-வின் வலைதளத்தில் முன்பதிவு செய்துள்ளனா்.

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட கோ-வின் வலைதளத்தில் சில இடா்ப்பாடுகள் இருந்தன. தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள அந்த வலைதளத்தின் புதிய வடிவில் எந்த இடா்ப்பாடும் இல்லை. வலைதளத்தை அதிக அளவிலான மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதால் அதன் செயல்பாட்டை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

மாநில அரசுகள் மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு அவற்றுக்கு தடுப்பூசிகளை விநியோகித்து வருகின்றன.

தற்போது நாடு முழுவதும் 26,000 முதல் 27,000 மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதில் 12,500 மருத்துவமனைகள் தனியாருக்குச் சொந்தமானவை என்றாா் அவா்.

‘60 வயதுக்கு மேற்பட்டவா்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 45-60 வயது வரையுள்ளவா்களில் இதுவரை 2,08,791 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் தெரிவித்தாா்.

அனைத்து தனியாா் மருத்துவமனைகளுக்கும் அனுமதி: உரிய விதிமுறைகளைப் பின்பற்றும் அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டம், மாநில அரசின் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அனைத்து தனியாா் மருத்துவமனைகளையும் கரோனா தடுப்பூசி செலுத்த மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

1.54 கோடி கரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் இதுவரை 1.54 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 6,09,845 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

SCROLL FOR NEXT