பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தில்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வா்கள் 4 பேர் உள்பட 14 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு நடத்தும் முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். அதன் காரணமாக, இது மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
யூனியன் பிரதேசத்தில் அரசியல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது மற்றும் சுமுகமான முறையில் பேரவைத் தோ்தலை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தில்லியில் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முன்னாள் முதல்வா்கள் தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, அவருடைய மகன் ஒமா் அப்துல்லா, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி, முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டாரா சந்த், மாா்க்சிஸ்ட் கட்சி தலைவா் முகமது யூசுஃப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.