இந்தியா

பிரதமருடனான சந்திப்பு நிறைவு: ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் கூறுவது என்ன?

24th Jun 2021 07:54 PM

ADVERTISEMENT


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்தது.

கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், பிரதமரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

ஜம்மு-காஷ்மீர் ஆப்னி கட்சி தலைவர் அல்டாஃப் புகாரி:

"மறுவரையறை பணியில் கலந்துகொள்ள பிரதமர் எங்களைக் கேட்டுக்கொண்டார். இது தேர்தலை நோக்கிய பாதை என எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. மாநில அந்தஸ்தை வழங்க உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் எங்களிடம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

பேச்சுவார்த்தை இன்று நல்ல முறையில் நடைபெற்றது. எங்களது பிரச்னைகள் குறித்து பிரதமர் அனைத்து தலைவர்களிடமும் கேட்டறிந்தார். மறுவரையறை பணிகள் நிறைவடைந்தவுடன் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்." 

சஜ்ஜாத் லோன், மக்கள் மாநாட்டு கட்சி:

"இந்த சந்திப்பு மிகவும் நல்ல முறையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் நாங்கள் நேர்மறையான மனநிலையிலேயே உள்ளோம்."

இதையும் படிக்க: பிரதமரிடம் 5 கோரிக்கைகள் முன்வைப்பு: குலாம் நபி ஆசாத்

ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா:

"ஜம்மு காஷ்மீரின் எதிர்காலத்துக்கும் முன்னேற்றத்துக்கும் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தலைவர்களிடமும் உறுதியளித்துள்ளார். அனைவரது கருத்துகளையும் பிரதமர் கேட்டறிந்தார். ஜம்மு காஷ்மீர் மக்களின் வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்."

மக்கள் மாநாட்டு கட்சித் தலைவர் முசாஃபர் ஹுசைன் பெய்க்:

"அனைத்து தலைவர்களும் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தனர். முதலில் மறுவரையறை பணிகள் நிறைவடையட்டும், மற்ற விவகாரங்கள் பின்னர் தீர்க்கப்படும் என பிரதமர் அதற்குப் பதிலளித்தார். இந்த கூட்டம் திருப்திகரமானதாக அமைந்தது. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் அமைதியை உண்டாக்க முழுமையான ஒருமித்தத் தன்மை உள்ளது."

கவிந்தர் குப்தா, பாஜக:

"மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகள் கிடைப்பார்கள் என்று நம்புகின்றனர். அதற்கான நடைமுறை செயல்பாட்டுக்கு வரும். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. அது திரும்ப வரும் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது."

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதன்பிறகு, அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு நடத்திய முதல் ஆலோசனைக் கூட்டம் இது. அதன் காரணமாக, இது மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

Tags : jammu kashmir
ADVERTISEMENT
ADVERTISEMENT