இந்தியா

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு

DIN


புது தில்லி: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும்.
விடுமுறைக் கால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடுவது, தேர்தலை நடத்துவது, முடிவுகளை அறிவிப்பது என அனைத்தும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க 4 மாத அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழக தேர்தல் ஆணையம் 18 மாதங்கள் ஆகியும் தேர்தலை நடத்தாதது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் 2018-19-ஆம் ஆண்டே முடிந்துவிட்டது. அதன்பிறகு புதிதாக பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியது. நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று செயல்படுத்தவில்லை எனில் தமிழக தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.நரசிம்ஹா, மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதாலும், அதன்பிறகு மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கவனம் செலுத்தப்பட்டதாலும் உச்சநீதிமன்றத்தின் 2019-ஆம் ஆண்டு உத்தரவை செயல்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள் அமர்வு, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குத்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு உள்ளதே தவிர, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அல்ல என்று தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இந்த 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த சிறிது கால அவகாசம் வேண்டும் என்று வழக்குரைஞர் நரசிம்ஹா கோரினார். அதற்கு நீதிபதிகள் அமர்வு, இப்போது எந்த ஒரு விஷயமானாலும் கரோனா தொற்றை ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். அரசியல் கட்சிகள் விரும்பினால் தேர்தலை நடத்த முடியும் என்றனர்.
9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15-க்குள் நடத்தி முடிக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்ற அவமதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்குரைஞர் நரசிம்ஹா, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தக் கூடாது என்ற எண்ணம் தமிழகத்துக்கு இல்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்போம் என்ற உத்தரவை பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
முதலில் 9 மாவட்டங்களின் எல்லைகளையும் மறுவரையறை செய்யும் பணியை முடிக்க வேண்டும். அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிக்கையை வெளியிட வேண்டும். அதன்பிறகு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்று வழக்குரைஞர் நரசிம்ஹா கேட்டுக் கொண்டார். எனினும், மேலும் கால அவகாசம் அளிக்க நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டதுடன், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துமாறு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
உள்ளாட்சித் தேர்தலை 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்குப்படி இல்லாமல், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நடத்துமாறு கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் கடந்த 2019, டிசம்பர் 7- இல் அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகவும், தேர்தலை 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படிதான் நடத்த வேண்டும். மேலும், மகளிர் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட வேண்டும். எனவே, தேர்தல் அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் முன்னதாக திமுக தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதை நிறுத்திவைத்து கடந்த 2019, டிசம்பர் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் எல்லை வரையறை மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளை முடிக்க 4 மாத கால அவகாசம் கொடுத்த நீதிமன்றம், பின்னர் அதை 3 மாதமாகக் குறைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT