இந்தியா

கரோனா: நிதி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்பு: பிரதமர் மோடி

DIN


புது தில்லி: கரோனா தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில், நிதி விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  கரோனா தொற்று பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இத்தகைய சூழலிலும் இந்திய மாநிலங்கள் கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் கூடுதலாகக் கடன் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும் மாநிலங்கள் ரூ.1.06 லட்சம் கோடியை கடனாகப் பெற்றுள்ளன. மத்திய, மாநில அரசுகள் இடையே நிலவும் ஒத்துழைப்பு காரணமாகவே இது சாத்தியமானது.
கொள்கை வகுக்கும் விவகாரங்களில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் பெரும் சவாலைச் சந்தித்து வருகின்றன. கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நிதி விவகாரங்களைத் திட்டமிடும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம் வடிவமைக்கப்படவில்லை. கூட்டாட்சித் தத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில், கடன் பெறுவதில் மாநிலங்களுக்குப் பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.
சீர்திருத்தங்களுக்கு ஊக்கத்தொகை: கடந்த ஆண்டு மே மாதத்தில் தற்சார்பு இந்தியாவுக்கான தொகுப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதில் மாநில அரசுகள் கூடுதல் கடனைப் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மொத்த உள்மாநில உற்பத்தி மதிப்பில் (ஜிஎஸ்டிபி) கூடுதலாக 2 சதவீதம் வரை கடன் பெற்றுக் கொள்வதற்கு மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதில் ஒரு சதவீத கடனை சில நிபந்தனைகளின் அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டது. "ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டத்தைச் செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மொத்த உள்மாநில உற்பத்தி மதிப்பில் 0.25 சதவீதம் வரை கடன் பெற அனுமதி வழங்கப்பட்டது. இந்தச் சீர்திருத்தமானது ஏழைகள், விளிம்புநிலை மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்டோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும்.
இத்திட்டத்தின் கீழ் மக்களின் குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறும் மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இதுவரை 17 மாநிலங்கள் இந்தச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, கூடுதலாக ரூ.37,600 கோடி வரை கடன் பெற்றுள்ளன.
தொழில் தொடங்கும் சூழல்: மாநிலத்தில் தொழில்புரிவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தரும் மாநிலங்கள், ஜிஎஸ்டிபி-யில் கூடுதலாக 0.25 சதவீதம் கடன் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதன்மூலம் பல மாநிலங்களில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் உருவானது.  இந்தச் சீர்திருத்தத்தை 20 மாநிலங்கள் நடைமுறைப்படுத்தின. அதன்மூலமாக ரூ.39,521 கோடியை கூடுதல் கடனாக அந்த மாநிலங்கள் பெற்றன. நகர்ப் பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கும் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்ட 11 மாநிலங்கள் ரூ.16,957 கோடியை கூடுதல் கடனாகப் பெற்றன. விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்குவதற்குப் பதிலாக அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தும் சீர்திருத்தத்தை 6 மாநிலங்கள் அமல்படுத்தின. இதன் வாயிலாக அந்த மாநிலங்களுக்கு ரூ.13,201 கோடி வரை கூடுதல் கடன் கிடைத்தது.
திட்டம் பெருவெற்றி: நாட்டில் முன்பு பல்வேறு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தன. இத்தகைய இக்கட்டான சூழலில், மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பல முக்கிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. அவற்றின் காரணமாக மக்கள் பெரிதும் பலனடைவர். இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் இருந்திருந்தால், இந்தச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று அதிகாரிகள் 
தெரிவித்தனர். 
ஊக்கத்தொகை வழங்குவதன் வாயிலாக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் திட்டம் பெருவெற்றி பெற்றுள்ளது என்று அந்த அறிக்கையில் பிரதமர் மோடி 
குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT