இந்தியா

இணையவழி வணிகத்தில் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை: விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு

DIN


புது தில்லி: இணையவழி வணிகத்தில் தொடர்ந்து நடைபெறும் மோசடிகளைத் தடுக்கும் வகையில், நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகள் 2020-இல் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இணையவழி வணிகத்தில் நடைபெறும் மோசடிகளைத் தடுப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகள் 2020-ஐ மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வந்தன. ஆனால், அதன் பிறகும் இணையவழி விற்பனைத் தளங்களில் பரவலான மோசடி, நியாயமற்ற வர்த்தகம் நடைபெறுவதாக நுகர்வோர், வர்த்தகர்கள் மற்றும் வர்த்தகர் சங்கங்களின் பிரதிநிதிகளிடமிருந்து மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. துரதிருஷ்டவசமான இந்த சம்பவங்கள் சந்தையில் நுகர்வோர் மற்றும் வணிகத்தை எதிர்மறையாக பாதித்துள்ளது; இதனால் பலருக்கு மிகுந்த மன உளைச்சலும் வேதனையும் ஏற்படுகிறது.

இதனால், நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் சுரண்டப்படுவதை தடுப்பதற்கும், சந்தையில் நியாயமான போட்டியை ஊக்குவிப்பதற்கும் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகள் 2020-இல் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த விதிகளில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு விதிகள் தொடர்பாக நுகர்வோர் ஜூலை 6-ஆம் தேதிக்குள் js-ca@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களது ஆலோசனைகள், கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

குறைதீர் அதிகாரி

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 மற்றும் விதிகளை உறுதி செய்யும்விதமாக ஓர் இணக்க அதிகாரி, நுகர்வோரின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு குறைதீர் அதிகாரியை இணையவழி வணிக நிறுவனங்கள் நியமிக்க வேண்டும். இது சட்டம் மற்றும் விதிகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதுடன், இணையவழி வணிக நிறுவனங்களின் குறைதீர்க்கும் வழிமுறைகளையும் பலப்படுத்தும்.

தவறான சித்தரிப்பு தடுப்பு

நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு தவறான சித்தரிப்புடன் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, பொருள்கள் அல்லது சேவை குறித்து தவறான சித்தரிப்புகள் மூலம் அவற்றை சிறந்தது எனக் கூறி விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்படுகிறது. பொருள்களின் காலாவதி தேதியைத் தவறாமல் இடம்பெறச் செய்ய வேண்டும்.

உள்நாட்டு உற்பத்தி

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நியாயமான வியாபார வாய்ப்பைப் பெறும் வகையில், இணையவழி வணிக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் நாட்டின் அடிப்படையில் பொருள்களை அடையாளம் காண்பதற்கான வசதியை உருவாக்க வேண்டும்.

பதிவு எண்

ஒவ்வொரு இணையவழி வணிக நிறுவனமும் தங்களுக்கான பதிவு எண்ணை ஒதுக்கீடு செய்வதற்காக தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த எண் நிறுவனங்களின் இணையதளத்தில் இடம்பெற வேண்டும். மேலும், நுகர்வோருக்கான ரசீதிலும் இடம்பெற வேண்டும்.

இந்தப் பதிவானது உண்மையான இணையவழி வணிக நிறுவனங்களின் தரவுத் தளத்தை உருவாக்க உதவும். நுகர்வோர் அந்தத் தளத்தின் மூலம் பரிவர்த்தனை செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்கவும் உதவியாக இருக்கும்.

சேவைக் குறைபாடு

ஒரு விற்பனையாளர் கவனக்குறைவான நடத்தை காரணமாக பொருள்கள் அல்லது சேவைகளை வழங்கத் தவறும் சந்தர்ப்பங்களில் நுகர்வோர் மோசமாக பாதிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதிரடி விற்பனைக்கு தடையில்லை

வழக்கமான ஃபிளாஷ் விற்பனைக்குத் தடையில்லை. ஆனால், வாடிக்கையாளர்களின் தேர்வை மட்டுப்படுத்தும், விலைகளை அதிகரிக்கும், நியாயமான வர்த்தக தளத்தைத் தடுக்கும் குறிப்பிட்ட ஃபிளாஷ் விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT