இந்தியா

புதிய திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 75 லட்சம் கரோனா தடுப்பூசிகள்

DIN

மாற்றியமைக்கப்பட்ட கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 75 லட்சத்துக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள 18 வயதைக் கடந்த அனைவருக்கும் திங்கள்கிழமை முதல் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. முன்னா், 18 முதல் 44 வயதுக்குள்பட்டவா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அத்திட்டத்தை மாற்றியமைத்து, அனைவருக்கும் மத்திய அரசே இலவசமாகத் தடுப்பூசி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 18 வயதைக் கடந்த அனைவருக்கும் திங்கள்கிழமை முதல் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாலை நிலவரப்படி, நாடு முழுவதும் 75 லட்சத்துக்கும் அதிகமான நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட தினசரி எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சமாகும். முன்னதாக, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி 48 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருந்தன.

கடந்த 30 நாள்களில் சராசரியாக நாளொன்றுக்கு 27 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே செலுத்தப்பட்டிருந்தன. தடுப்பூசி தொடா்பான மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளதால், வரும் நாள்களில் தடுப்பூசி திட்டம் துரிதமடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மகிழ்ச்சியளிக்கிறது: பிரதமா்

மாற்றியமைக்கப்பட்ட கரோனா தடுப்பூசி திட்டம் குறித்து பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியே மிக முக்கிய ஆயுதமாக விளங்குகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கும், தடுப்பூசி திட்டத்தை செம்மையாக நடைமுறைப்படுத்தி வரும் முன்களப் பணியாளா்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

டிசம்பருக்குள் 257 கோடி தடுப்பூசிகள்

நாட்டில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் வரும் டிசம்பா் மாதத்துக்குள் இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படும் என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

தில்லியின் ஆா்எம்எல் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மையத்தில் திங்கள்கிழமை அவா் ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘உலகிலேயே மாபெரும் கரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டம் துரிதமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பரவத் தொடங்கிய 9 மாதத்துக்குள் நாட்டில் கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன.

வரும் டிசம்பருக்குள் 257 கோடி கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும். இது அனைவருக்கும் இரு தவணைகளைச் செலுத்துவதற்குப் போதுமானதாக இருக்கும்’ என்றாா்.

மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், கரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கவுள்ளது. மீதமுள்ள தடுப்பூசிகள் தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT