இந்தியா

கரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் என்பது சாத்தியமற்றது: மத்திய அரசு

20th Jun 2021 02:29 PM

ADVERTISEMENT


கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் கொடுப்பது சாத்தியமற்றது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க சம்மந்தப்பட்ட துறைகளை அறிவுறுத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 24-இல் நோட்டீஸ் அனுப்பியது.

இதுதொடர்பாக, 183 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதில் மத்திய அரசு தெரிவித்துள்ளது:

ADVERTISEMENT

"பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-இன் கீழ் குறிப்பிடப்பட்ட 12 பேரிடர்களுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. 2021-22 ஆண்டுக்கு அனைத்து மாநிலங்களுக்கான மாநில பேரிடர் மீட்பு நிதியின் மொத்த ஒதுக்கீடே ரூ. 22,184 கோடி. இந்தப் பெருந்தொற்றால் 3.85 லட்சத்துக்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கடந்த காலங்களில் எந்தவொரு பேரிடரிலும் இல்லாத வகையில் பெருந்தொற்று பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளன.

எனவே, ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமானால், மாநில பேரிடர் மீட்பு நிதி முழுவதையும் பயன்படுத்த வேண்டியதாகிவிடும். மொத்த செலவீனம் இன்னும் அதிகரிக்கவும் கூடும்.

இது துரதிருஷ்டவசமானது. அரசுகளின் வளங்களுக்கு வரம்புகள் உள்ளன என்பது நிதர்சமானது. இழப்பீடு வழங்குவதன் மூலம் ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையால் சுகாதாரம் மற்றும் நலத் திட்டங்களுக்கான நிதியும் குறையும்.

வெள்ளப் பெருக்கு, நிலநடுக்கம், புயல் போன்ற பேரிடர்களைப்போல் அல்லாமல், கரோனா பெருந்தொற்றில் தடுப்பு நடவடிக்கை, பரிசோதனை, சிகிச்சை, தனிமைப்படுத்துதல், மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவற்றுக்கே மத்திய அரசும், மாநில அரசுகளும், ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்துள்ளன. இன்னும் எத்தனை தொகை செலவழிக்க வேண்டும் என்பதும் தெரியாது. அடுத்தடுத்த கரோனா அலைகளை எதிர்கொள்வதற்கான தயார் நிலை மற்றும் தடுப்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன."

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT