இந்தியா

கும்பமேளாவுக்கு வந்தவர்களுக்கு போலி நெகடிவ் சான்றிதழ்: விசாரணைக்கு உத்தரவு

19th Jun 2021 12:20 PM

ADVERTISEMENT


புது தில்லி: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு போலியான நெகடிவ் சான்றிதழ் வழங்கிய ஆய்வுக் கூடங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்கட்ட விசாரணையில்,  கும்பமேளாவில் பங்கேற்றவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் போலியான கரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருந்ததும், இதுபோன்ற போலியான நெகடிவ் சான்றிதழ் கொடுத்து 22 ஆய்வுக் கூடங்கள் மோசடியில் ஈடுபட்டதும், இவை பெரும்பாலானவை தில்லி மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்தவை என்றும் தெரிய வந்துள்ளது.

தில்லி மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த ஆய்வுக் கூடங்கள், ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற்ற போது 5 இடங்களில் ஆய்வுக் கூடங்களை அமைத்து, கும்பமேளாவில் பங்கேற்க வந்தவர்களுக்கு பரிசோதனைகளை நடத்தியது. அப்போது சுமார் ஒரு லட்சம் பேருக்கு போலியான நெகடிவ் சான்றிதழ் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ஹரித்வார் மாவட்ட நிர்வாகம் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கும்பமேளாவுக்கு வந்த ஒரு பக்தரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு வந்த குறுந்தகவலில், பரிசோதனை செய்து கொண்ட உடனேயே கரோனா இல்லை என்று சான்றிதழ் அளிப்பதாகவும், பரிசோதனை செய்து கொள்ளாவிட்டாலும் கூட , கரோனா இல்லை என்று சான்றிதழ் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

உடனடியாக இது குறித்து ஐசிஎம்ஆர்-இல் அந்த நபர் புகார் அளிக்க, இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது, இந்த மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுகிறது. நிகழாண்டு நடைபெற்ற விழாவில், கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து கொண்டிருந்த நிலையிலும் சுமார் 70 லட்சம் பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்றதும், அது குறித்து பல்வேறு தரப்பில் கடும் விமரிசனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
 

Tags : uttarakhand haridwar KumbhMela
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT