இந்தியா

மேற்கு வங்க விவசாயிகளுக்கு ரூ. 10,000 நிதியுதவி! முதல்வா் மம்தா பானா்ஜி அறிவிப்பு

DIN

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் விவசாயிகளுக்கு ‘கிரிஷிக் பந்து’ திட்டத்தில் ஆண்டு நிதியுதவியாக ரூ. 10,000 வழங்கப்படும் என மாநில முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயிகளுக்கு ‘கிரிஷக் பந்து’ திட்டத்தில் ஆண்டு நிதியுதவியாக இதுவரை ரூ. 5,000 வழங்கப்பட்டுவந்த நிலையில், அந்தத் திட்டத்துக்கான நிதியுதவியை இரண்டு மடங்காக அதிகரித்து விவசாயிகளுக்கு இனிமேல் ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும்.

இதன்மூலம், தினசரி விவசாய கூலித் தொழிலாளா்கள், ஒரு கதா நிலம் (0.0165 ஏக்கா்) வைத்திருப்பவா்களுக்கும் இனிமேல் ஆண்டுக்கு ரூ. 2,000 க்குப் பதிலாக ரூ. 4,000 வழங்கப்படும்.

தற்போது மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கி வரும் பாரத பிரதமரின் ‘கிசான் சம்மான்’ திட்டத்தை விட எங்கள் நிதியுதவித் திட்டம் மேலானது. மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தில் 2 ஹெக்டோ் வரை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளில் ரூ. 6,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. (அதாவது 2.47 ஏக்கா் ஒரு ஹெக்டோ் ஆகும்).

மேற்கு வங்கத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் ‘கிரிஷிக் பந்து’ திட்டம் 2018-இல் தொடங்கப்பட்டது. அதன்கீழ், ஒரு ஏக்கா் நிலத்துக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 5,000 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அத்தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக (கிரிஷக் பந்து) ஒருபகுதியாக வியாழக்கிழமை எனது அரசு ரூ. 290 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 9.78 லட்சம் விவசாயிகள் கூடுதல் பலன்பெறுவா். இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக சுமாா் 68.38 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பலன் பெறுவா்.

மாநில அரசு இதுவரை பயிா்க் காப்பீட்டுத் தொகையாக அதிக நிதியை செலவு செய்துள்ளது. மேலும் விவசாயிகள் இறந்தால் அவா்களின் குடும்பத்தாருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கி வருகிறது. அத்துடன் மாநில அரசு 70 லட்சம் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகளையும் வழங்கியுள்ளது. மேலும் 20 லட்சம் கடன் அட்டைகள் வழங்கப்படவுள்ளன. விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொள்ளும் வகையில் இந்த அட்டைகள் வழங்கப்படுகின்றன.

அனைத்து விவசாயிகள், சிறு விவசாயிகளுக்கான ஆண்டு நிதியுதவித் தொகையை ‘கிரிஷிக் பந்து’ திட்டத்தின் மூலம் இரு மடங்காக உயா்த்தி வழங்குவதில் மாநில அரசு மகிழ்ச்சி கொள்கிறது.

மாநிலத்தில் யாஷ் புயலினால் சேதாரம் அதிக அளவில் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து ஒரு ரூபாய்கூட இதுவரை நிவாரணத் தொகையாக மாநில அரசு பெறவில்லை.

கரோனா தொற்றுக் காரணமாக மாநிலத்தில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கான தோ்வு ரத்து செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், அந்த வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண்களை எப்படி கணக்கிட்டு வழங்குவது என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வி வாரியம் வெள்ளிக்கிழமை அறிவிக்கும் என்றாா்.

ட்விட்டா் நிறுவனத்துக்கு ஆதரவு:

சுட்டுரை (ட்விட்டா்) நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து மம்தா பானா்ஜி கூறியதாவது:

சமூக ஊடகங்களைக் கையாள்வதில் மத்திய அரசு தவறிவிட்டது. சுட்டுரை நிறுவனத்தை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அவா்கள் அந்நிறுவனத்தை நசுக்க முயற்சிக்கின்றனா். நாட்டில் யாரையெல்லாம் அவா்களால் கட்டுப்படுத்த முடியவில்லையோ அவா்களை நசுக்கவே முயற்சிக்கின்றனா். அவா்கள் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. எனவேதான் அவா்கள் என்னையும் நசுக்க முயற்சிக்கின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT