இந்தியா

கரோனா பரவலைத் தடுக்க 6 வயது மகனிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்ட பெண்: பிரதமர் பாராட்டு

DIN

புது தில்லி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் தன்னுடைய 6 வயது மகனிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பெண்ணின் தைரியத்தையும், அவரது நேர்மறையான சிந்தனையையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 
உத்தரபிரதேச மாநிலம், காஜியாபாத், செக்டர் -6 பகுதியை சேர்ந்தவர் பூஜா வர்மா. கணவர் ககன் கெளசிக், 6 வயது மகனுடன் 3 படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் கரோனா கண்டறியும் பரிசோதனை செய்ததில் கணவர், மனைவி ஆகிய இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து மூவரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்திக் கொள்வது என்ற முடிவை எடுத்தனர். 
இதுகுறித்து பூஜா வர்மா கூறியதாவது: கரோனா தொற்று பற்றியோ, அதுதொடர்பான விதிமுறைகள் குறித்தோ, இந்தத் தனிமைப்படுத்தலின் தேவை என்ன என்பதையோ புரிந்துகொள்ள முடியாமல் பெற்றோரின் அன்புக்காக ஏங்கிய 6 வயது குழந்தைக்கு இது எளிதான செயல் அல்ல.  
எங்கள் மகன் எங்களிடமிருந்து விலகி தனி அறையில் தங்கியிருக்க வேண்டும் என்றால், அதற்காக என் மகன் என்ன தவறு செய்தார் என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன். 
அப்போதுதான், பிரதமர் மோடி எழுதிய ஒரு கவிதை மூலம் என் குழந்தையிடமிருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொண்டேன் என்றார்.
இதையடுத்து, தன் நிலை குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தான் குழந்தையிடமிருந்து விலகி இருக்க வேண்டிய  சோதனையான காலகட்டம் குறித்து ஒரு தாயாக விவரித்து எழுதியுள்ளார். 
பூஜா வர்மாவுக்கு பிரதமர் மோடி எழுதிய பதில் கடிதத்தில், அவரது குடும்பத்தின் நலனை விசாரித்துள்ளார். மேலும் அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: 
கடினமான சூழ்நிலையில் உங்கள் குடும்பத்தினர், கரோனா தொற்றுக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, நோயை எதிர்த்துப் போராடியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் பொறுமையை இழக்காதீர்கள். துன்பமான காலங்களில் தைரியத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே நம்முடைய சாஸ்திரங்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளன.
ஒரு தாய் தனது குழந்தையிடமிருந்து விலகி இருக்கும்போது, அந்தக் குழந்தை எதிர்கொள்ளும் கவலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. 
பூஜா வர்மா தன்னுடைய சிறந்த தைரியத்துடனும், நேர்மறையான சிந்தனையுடனும் தொடர்ந்து முன்னேறி, வாழ்க்கையில் வரும் எந்த சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்வார் என்று நம்புகிறேன் என்று பிரதமர் தெரித்துள்ளார். 
இதுகுறித்து ககன் கெளசிக் கூறுகையில், நானும், என் மனைவி பூஜா வர்மாவும் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டதால் எங்கள் மகனுக்கு கரோனா தொற்று தாக்கவில்லை. தற்போது நாங்கள் இருவரும் குணமடைந்துவிட்டோம் 
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT