இந்தியா

மாநிலங்களவை உறுப்பினர் காலியிடம்: தேர்தல் நடத்த ஆணையத்தில் திமுக வலியுறுத்தல்

 நமது நிருபர்


புது தில்லி: காலியாக உள்ள தமிழகத்துக்குரிய 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடைத் தேர்தலை தனித் தனியாக நடத்த வேண்டும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் திமுக புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொருளாளரும், அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் ஆகியோர் புதன்கிழமை தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா, தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், அனுப் சந்திரா பான்டே ஆகியோரைச் சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடைத் தேர்தலை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951}இன்படி, உடனடியாக நடத்த வேண்டுமென வலியுறுத்தினர்.
மேலும், இதுதொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தேர்தல் ஆணையத்திடம் ஒரு கடிதமும் அளித்தார். அதில் "நிகழாண்டு மார்ச் 23}ஆம் தேதி மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் முகமது ஜான் இறந்து விட்டார். கடந்த மே 10}ஆம் தேதி மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்கள் ஆர்.வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். இந்த மூவரின் பதவிக் காலம் முறையே 24.7.2025, 29.06.2022 மற்றும் 02.04.2026 ஆகிய தேதிகளில் முடிவடையும் நிலையில், தற்போது தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடைத் தேர்தலை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951}இன்படி உடனடியாக ஆணையம் நடத்த வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக டி.ஆர். பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், "காலி இடங்களாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தனித் தனியாக தேர்தல் நடத்துவதற்கான அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம். பாஜக தலைவர்கள் ஸ்மிருதி இரானி, அமித் ஷா ஆகியோர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது இதுபோன்று காலியாக இருந்த பணியிடங்களுக்கு தனித் தனியாகத் தேர்தல் நடத்தப்பட்டது. இதேபோன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அகமது பட்டேல், பரத்வாஜ் ஆகியோர் மறைந்தபோது அவர்கள் வகித்த பதவி காலியானதை அடுத்து தனித் தனியாக தேர்தல் நடத்தப்பட்டது. அதேபோன்று தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தனித் தனியாக நடத்தப்பட வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளோம்' என்றார்.
மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி. கூறுகையில், "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 147}இன்படி மாநிலங்களவைக்கான தற்காலிக காலியிடங்கள் தனித் தனியான தேர்தல்கள் மூலம் நிரப்பட வேண்டும், பிரிவு 70} இன்படி உறுப்பினர் பதவிகளைத் துறந்ததால் ஏற்படும் காலியிடங்களை தற்காலிக காலியிடங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும், தில்லி, மும்பை உயர்நீதிமன்றங்களில் இதுதொடர்புடைய வழக்குகளில் நீதிமன்றமும் தீர்ப்பு அளித்துள்ளது. இவற்றைச் சுட்டிக்காட்டினோம். பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர்கள் கூறியிருக்கிறார்கள்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT