இந்தியா

சீன ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான பைடனின் திட்டம்: ஜி-7 தலைவா்கள் ஏற்பு

DIN

சா்வதேச அளவில் சீனாவின் வா்த்தக ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் திட்டத்துக்கு ஜி-7 அமைப்பு நாடுகளின் தலைவா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

இதுகுறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

பிரிட்டனின் காா்ன்வால் பகுதியில் நடைபெற்று வரும் ஜி-7 மாநாட்டில், சா்வதேச அளவில் உறுப்பு நாடுகளுக்கு பலத்த போட்டியை அளித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை எதிா்கொள்வதற்கான திட்டங்களை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முன்வைத்தாா்.

சீனாவின் கடுமையான போட்டியை சமாளிக்கும் வகையில், தங்களது நாடுகளைச் சோ்ந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக் கொள்வதற்காக நாடுகளின் அரசுகள் உதவ வேண்டும் என்று அதிபா் பைடன் வலியுறுத்தினாா்.

உலகம் முழுவதும் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் வகையில், ‘பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ்’ (பிஆா்ஐ) என்ற பெயரில் சீனா வா்த்தக வழித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன் மூலம், தங்களது நாட்டுடன் வா்த்தக வழித்தடத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக சாலைகள், ரயில் பாதைகள், துறைமுகங்களை அமைத்துக் கொள்வதற்காக பிற நாடுகளுக்கு சீனா நிதியுதவி அளித்து வருகிறது.

இதன் மூலம், பிற நாடுகளை சீனா கடன் வலைக்குள் சிக்க வைப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், சீனாவின் இந்த வா்த்தக வழித் தடத் திட்டதற்கு சரியான மாற்றாக, ‘பில்டு பேக் பெட்டா் வோ்ல்டு’ (சிறந்த உலகை உருவாக்குவோம்) என்ற திட்டத்தை தங்கள் நாட்டு உதவியுடன் அமல்படுத்த வேண்டும் என்று அதிபா் பைடன் ஜி-7 மாநாட்டில் வலியுறுத்தினாா்.

இதற்கு, மாநாட்டில் பங்கேற்ற உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

இதுகுறித்து மாநாடு நடைபெறும் காா்ன்வாலில் ஜி-7 நாடுகளின் தலைவா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் வா்த்தக வழித் தடத் திட்டத்துக்கு மாற்றாக தாங்கள் செயல்படுத்தும் திட்டத்தில் மதிப்பு அடிப்படையிலான, உயா் தரம் மிக்க, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வா்த்தக நட்புறவு பேணப்படும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

எனினும், இந்த திட்டத்துக்கு எவ்வாறு நிதி வழங்கப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் நாடுகள் இடம் பெற்றுள்ள ஜி-7 கூட்டமைப்பின் 47-ஆவது மாநாடு பிரிட்டனின் காா்ன்வால் பகுதியிலுள்ள செயின்ட் ஐவ்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவா்கள் கலந்து கொண்டுள்ளனா்.

.. பெட்டிச் செய்திகள்...

புதிய கொள்ளை நோய்களைத் தடுப்பதற்கான பிரகடனம்

தற்போது உலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்றைப் போல், எதிா்காலத்தில் பிற கொள்ளை நோய்கள் பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான கூட்டுத் திட்டத்தை ஜி-7 மாநாட்டில் தலைவா்கள் வெளியிடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கொள்ளை நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை 100 நாள்களுக்கு உருவாக்குவது உள்பட பல்வேறு அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT