இந்தியா

மரபணுக் கோளாறு: சிறுவனுக்கு செலுத்தப்பட்டது உலகின் மிக விலையுயர்ந்த மருந்து

DIN

ஹைதராபாத்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மரபணுக் கோளாறால் அவதிப்பட்டு வந்த 3 வயது சிறுவனுக்கு உலகிலேயே மிக விலை உயர்ந்த மருந்து செலுத்தப்பட்டது.

கருணை உள்ளத்தோடு சுமார் 65 ஆயிரம் பேரின் நிதியுதவியால் வாங்கப்பட்ட ஸோல்ஜென்ஸ்மா என்று பெயரிடப்பட்டிருக்கும் உலகின் விலையுயர்ந்த மருந்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, மூன்று வயது சிறுவன் அயான்ஷ் குப்தாவுக்கு புதன்கிழமை தனியார் மருத்துவமனையில் செலுத்தப்பட்டது.

இந்த மருந்து செலுத்தப்பட்டிருப்பதன் மூலம், ஒரு வயது முதல் தண்டுவட மரபணு கோளாறால் அவதிப்பட்டு வந்த சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த  நோயால், சிறுவனின் தசைகள் தளர்வடைந்து, தனது கை கால்களைக் கூட அசைக்க முடியாமல், உட்காரவோ, நிற்கவோ இயலாமல் இருந்து வந்தான்.  அவ்வளவு ஏன், வாயில் ஊட்டப்படும் உணவைக் கூட அவனால் மென்று விழுங்க இயலாது.

மரபணுக் கோளாறுக்கு மிகவும் விலையுயர்ந்த மருந்து இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து பெற்றோரிடம் கூறினர். ஒரு தவணை மருந்து ரூ.16 கோடி என்று அறிந்ததும், செய்வதறியாது கலங்கிய பெற்றோர், தங்களது மகனின் நிலை குறித்து சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டனர்.

இந்த மருந்தைப் பெற மூன்று மாதங்களில் பொதுமக்களிடமிருந்து பணம் திரட்டப்பட்டது. இதற்கு முக்கிய  நட்சத்திரங்களான, விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா, அனில் கபூர், அஜய் தேவ்கான் மற்றும் ஏராளமான தொலைக்காட்சி பிரபலங்களும் நிதியுதவி அளித்தனர். சுமார் 65 ஆயிரம் பேரின் நிதியுதவி மூலம் ரூ.16 கோடி திரட்டப்பட்டது. இதற்கிடையே இந்த மருந்துக்கான இறக்குமதி வரியாக ரூ.6 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்தது.

இப்படி பல போராட்டங்களைக் கடந்து அந்த மருந்து இந்தியா வந்து சேர்ந்தது. இதையடுத்து, அயான்ஷ் குப்தாவுக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டது. இதன் பயனாக, வரும் நாள்களில் குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

குழந்தை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நிலையில், தங்களது மகனின் சிகிச்சைக்காக நிதியுதவியளித்த 65 ஆயிரம் பேருக்கும் மனமார்ந்த நன்றிகளை பெற்றோர் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT