இந்தியா

எடியூரப்பா சிறப்பாகவே பணியாற்றுகிறார்: கர்நாடக பாஜக மேலிடப் பொறுப்பாளர்

10th Jun 2021 02:31 PM

ADVERTISEMENT


கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா சிறப்பாகவே பணியாற்றி வருவதாக பாஜக தேசியப் பொதுச்செயலரும், கர்நாடக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான அருண் சிங் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் தலைமை மாற்றம் குறித்து கடந்த சில நாள்களாகவே பேச்சுகள் இருந்து வந்தன. அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க பாஜகவில் திரைமறைவு வேலைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

இதனிடையே, பாஜக தலைமைக்கு நம்பிக்கை இருக்கும் வரை முதல்வர் பதவியில் தொடர்வேன் என முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது கர்நாடகத்தில் பரபரப்பானது.

இதைத் தொடர்ந்து, எடியூரப்பாவை மாற்றுவது பற்றி எவ்வித விவாதமும் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கர்நாடக பாஜக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் எடியூரப்பா சிறப்பாகவே பணியாற்றி வருவதாக அருண் சிங் தெரிவித்துள்ளார்.

கர்நாடக பாஜக தலைமை மாற்று குறித்து தெரிவித்தது:

"அப்படி எதுவும் இல்லை. எடியூரப்பாதான் முதல்வர். அவர் சிறப்பாகவே பணியாற்றுகிறார். அவர் முதல்வராகத் தொடர்வார். அமைச்சர்களுடன் இணைந்து கரோனா தொடர்பாக அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்."

பாஜக மாநிலத் தலைவர் மாற்றப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்தது:

"இது வதந்தி. இதுபோன்ற வதந்திகள் பரப்பக் கூடாது. கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவரின் கீழ் கட்சியின் பணிகள் சிறப்பாகவே நடக்கின்றன. களத்தில் சிறப்பாகவே செயலாற்றி வருகிறோம். கட்சியில் மாற்றம் எதுவும் இல்லை, அது வெறும் கற்பனையே" என்றார் அருண் சிங்.

Tags : Yediyurappa
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT