இந்தியா

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால்: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

2nd Jun 2021 03:12 AM |  நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றின் பிந்தைய சிக்கல்கள் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 பிளஸ்-2 பொதுத் தேர்வு குறித்த முடிவு எடுக்க ஜூன் 1 -ஆம் தேதி கூட்டம் நடைபெற இருந்த நிலையில் கல்வி அமைச்சருக்கு பதிலாக பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடைபெற்று முடிவு எடுக்கப்பட்டது.
 கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் (61), தனக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளதாக கடந்த ஏப்ரல் 21 - ஆம் தேதி அறிவித்திருந்தார். தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறியிருந்த அவர், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் கூறியிருந்தார்.
 சிகிச்சைக்குப் பின்னர் பணிக்கு திரும்பிய நிலையில், போக்ரியால் உடல் நலக்குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 கரோனா நோய்க்குரிய பிந்தைய பிரச்னைகள் காரணமாக எய்ம்ஸில் மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அந்தத் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் நீரஜ் நிசால் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
 கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் போக்ரியால், சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் பெற்று மீண்டும் பணிக்குத் திரும்பி, புதிய கல்விக் கொள்கை குறித்த கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 மேலும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் உள்ளிட்ட பிளஸ் - 2 பொதுத் தேர்வு குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைமையில் மாநில கல்வி அமைச்சர்களுடன் மே 23-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திலும் ரமேஷ் போக்ரியால் கலந்து கொண்டிருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT