இந்தியா

இஸ்ரோ உளவு வழக்கு: குஜராத் முன்னாள் டிஜிபிக்கு இடைக்கால முன்ஜாமீன்; கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு (79) எதிராக ஜோடிக்கப்பட்ட உளவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான குஜராத் மாநில முன்னாள் காவல்துறை டிஜிபி ஆா்.பி.ஸ்ரீகுமாருக்கு கேரள உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது.

இந்த விவகாரம் நடைபெற்றபோது திருவனந்தபுரம் காவல்துறை உளவுப் பிரிவில் பணியாற்றிய ஸ்ரீகுமாா், அதன் பிறகு குஜராத் மாநிலத்துக்கு பணி மாற்றம் பெற்று காவல்துறை டிஜிபியாக பணி ஓய்வுபெற்றாா். இவா் உள்பட கேரள மாநில காவல்துறை உளவுப் பிரிவில் பணியாற்றிய 11 அதிகாரிகளை இந்த வழக்கில் குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கையில் சிபிஐ சோ்த்துள்ளது.

இஸ்ரோ ராக்கெட் என்ஜின்கள் தொடா்பான ரகசியங்களை கடந்த 1994-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விற்க முயன்ாக அப்போதைய இஸ்ரோ இயக்குநா் நம்பி நாராயணன், துணை இயக்குநா் டி.சசிகுமாா் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, நம்பி நாராயணன் குற்றமற்றவா் என்றும், கேரள காவல்துறையால் அவருக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் தெரிவித்தது. இதையடுத்து அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் காவல்துறையினா் இழைத்த தவறுகள் குறித்து கண்டறிவதற்கு நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழு நடத்தி விசாரணையில் உளவு பாா்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்டோா் ஆதாரம் இன்றி கைது செய்யப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு விசாரணையின்போது, அவருடைய மேலதிகாரிகள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த நம்பி நாராயணனுக்கு காவல்துறையினா் உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்தல் அளித்தாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

அதனடிப்படையில், திருவனந்தபுரத்தில் காவல்துறை உளவுப் பிரிவில் துணை இயக்குநராக 1992 முதல் 1995 வரை பணியாற்றி, இஸ்ரோ உளவு விவகாரத்தில் கேரள காவல்துறைக்கு உதவுவதற்காக அயல்பணி அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஸ்ரீகுமாா் உள்பட 11 உளவுப் பிரிவு அதிகாரிகளை குற்றவாளிகளாக சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தொடா்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்களை கைது செய்து விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

அதனைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் சிபிஐயின் கைது நடவடிக்கையை தவிா்ப்பதற்காக ஸ்ரீகுமாா் சாா்பில் முன்ஜாமீன் கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கே.ஹரிபால் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

ஸ்ரீகுமாருக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய கேரள அரசு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஸ்ரீகுமாா் தரப்பு வழக்குரைஞா் மஞ்சுநாத் மேனன், இந்த விவகாரத்தில் குஜராத் உயா்நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் ஸ்ரீகுமாரை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டதையும், வியாழக்கிழமை மதியம் 2.30 மணி வரை கைது நடவடிக்கை கூடாது என புதன்கிழமை உத்தரவு பிறப்பிததையும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டாா்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் வரை மனுதாரா் மீது கைது நடவடிக்கை கூடாது என்று கூறி, வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஆக.2) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT