இந்தியா

நான் அடிமையாக விற்கப்பட்டேனாம்: கத்தாரிலிருந்து திரும்பிய பெண் கண்ணீர்

30th Jul 2021 02:21 PM

ADVERTISEMENT


கொச்சி: வறுமை... இது கரோனாவை விட மிகக் கொடூரமானது, ஒரு முறை ஒருவரைப் பிடித்துவிட்டால், அவர்களை விட்டு அவ்வளவு எளிதில் போகாது. இதிலிருந்து மீள உலகளவில் வேறெந்த உபாயங்களும் ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை.

ஒரு வறுமையின் கோரப்பிடியிலிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற நினைத்த 43 வயது பெண்ணுக்கு நேரிட்ட அவலமே இந்தச் செய்தி.

ப்ரீத்தி செல்வராஜ்.. தோஹாவில் வேலை இருப்பதாகச் சொன்னதும் தனது குடும்பத்தின் வறுமை எல்லாம் ஒழிந்துவிடும் என்று கனவு காண ஆரம்பித்துவிட்டார்.

தனது தாய், கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்து வந்த ப்ரீத்தி, கணவரின் ஒற்றைச் சம்பளத்தில் இவ்வளவு பேரும் மூன்று வேலை உணவருந்த வழி தெரியாமல் தவித்து வந்த குடும்பத்தின் தலைவிக்கு வேறு என்ன கனவு வந்துவிடும்.

ADVERTISEMENT

கத்தார் மாநிலம் தோஹாவிலுள்ள அரபுக் குடும்பத்தில் பணிப்பெண்ணாகப் பணியாற்ற மாதம் ரூ.23 ஆயிரம் வழங்குவதாகக் கூறியதை நம்பி அவரும் கத்தார் புறப்பட்டுச் சென்றார்.

அங்கு சலீம், ஸாகீர் என்ற இரண்டு தரகர்களிடம் கைமாறி, ஒரு அரபுக் குடும்பத்திடம் சென்று சேர்ந்தார். அங்குதான், வறுமையை ஒழிக்க தனது குடும்பத்தைக் காப்பாற்ற இந்தியாவிலிருந்து செல்லும் எண்ணற்ற பெண்கள் சந்திக்கும் அதேக் கொடுமையை ப்ரீத்தியும் சந்தித்தார்.

இது பற்றி அவரே சொல்கிறார்.. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.. பத்திரமாக வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். கேரளத்தில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் மூலம் எனது பிரச்னையை கணவர் வெளிக் கொண்டுவந்து, கத்தாரிலிருக்கும் சமூக அமைப்பு மூலம் என்னை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வீட்டில் பணிக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே எனக்கு துன்புறுத்தல் தொடங்கிவிட்டது. முதல் நாளிலேயே, என்னை அங்கு அழைத்து வந்த தரகரிடம் எனக்கு நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்துச் சொல்லியும் கூட எந்த நடவடிக்கையும் இல்லை. இப்படியே அங்கு ஒரு ஆண்டு நான்கு மாதங்கள் பணியாற்றிவிட்டேன். இறுதியாக ஜூலை 9ஆம் தேதி கொச்சி திரும்பினேன் என்கிறார்.

அந்த அரபுக் குடும்பத்திடம், என்னை கேரளத்துக்கே திரும்ப அனுப்பிவைக்குமாறு கேட்கும்போதெல்லாம், அவர்கள் என்னிடம் கூறுவது என்னவென்றால், 'ஒரு தரகரிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்து உன்னை அடிமையாக வாங்கியிருக்கிறோம்' என்றுதான். எந்த ஓய்வும் இல்லாமல் பணியாற்ற வைப்பார்கள். மீதமானதை மட்டுமே உண்ணுவதற்கு அனுமதிப்பார்கள். அந்த வீட்டிலிருந்த இரண்டு பெண்கள் என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். கடைசியாக எனக்கு ஊதியம் கொடுப்பதையும் அவர்கள் நிறுத்திவிட்டார்கள் என்கிறார் கண்ணீரோடு.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தரகர்களாக செயல்பட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
 

Tags : Qatar torture Kerala woman
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT