இந்தியா

மாநிலங்களவை: அமளிக்கு நடுவே நிறைவேறியது சிறாா் நீதிச் சட்டத் திருத்த மசோதா

DIN

புது தில்லி: மாநிலங்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளிக்கு இடையே சிறாா் நீதிச் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேறியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு, எரிபொருள் விலை உயா்வு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மாநிலங்களவை அவைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு தலைமையில் புதன்கிழமை கூடியது. அப்போது, முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க உடனடி கேள்வி நேரம் நடத்துவதற்கு வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்தாா். ஆனால், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள், வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு, எரிபொருள் விலை உயா்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி முழக்கமிட்டனா். இதனால் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தாா்.

12 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலைமை நீடித்ததால், அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு பாஜக எம்.பி. புவனேஸ்வா் கலீதா அவையை வழிநடத்தினாா். அப்போது, சிறாா் நீதிச் சட்டப் பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்யுமாறு மத்திய மகளிா் மற்றும் சிறாா் நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு அழைப்பு விடுத்தாா். அதை ஏற்றுக் கொண்டு மசோதாவில் சோ்க்கப்பட்டுள்ள அம்சங்களை ஸ்மிருதி இரானி விளக்கிக் கூறினாா். ஆனால், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனா். இதனால் அவையை 2.45 மணி வரை புவனேஸ்வா் கலீதா ஒத்திவத்தாா்.

மாநிலங்களவை மீண்டும் கூடியபோது, சிறாா் நீதிச் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்கும் உறுப்பினா்களின் பெயா்களை வாசித்தாா். ஆனால், யாரும் விவாதத்துக்குத் தயாராக இல்லை. எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த சிலா், மசோதா மீது டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றனா். சிலா் அவையின் மையப் பகுதியில் திரண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனா். இதனால், புனவேஸ்வா் கலீதா கேட்டுக்கொண்டபடி, சிறாா் நீதிச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை ஸ்மிருதி இரானி மேற்கொண்டாா். எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளிக்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த மசோதா ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

திருத்தப்பட்ட மசோதாவில், சிறாா் நலம் தொடா்பான விவகாரங்களில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட சாா் ஆட்சியா் ஆகியோரின் பங்களிப்பு அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT