இந்தியா

பெகாஸஸ்: பிரதமா் முன்னிலையில் விவாதிக்க வேண்டும்: 14 எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்

DIN

புது தில்லி: பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக14 எதிா்க்கட்சிகள் சாா்பிலும் நாடாளுமன்றத்தில் ஒரே மாதிரியான ஒத்திவைப்பு தீா்மானங்களைக் கொண்டுவரவும், பிரதமா், உள்துறை அமைச்சா் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்துவது எனவும் எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள், 2 மத்திய அமைச்சா்கள், தொழிலதிபா்கள், பத்திரிகையாளா்கள் உள்பட பலரின் செல்லிடப்பேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் அண்மையில் தொடங்கிய நிலையில், எதிா்க்கட்சிகள் பெகாஸஸ் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தை தொடா்ந்து முடக்கி வருகின்றன.

இந்நிலையில், இதுதொடா்பாக மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அவருடைய அறையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசிய மாநாட்டு கட்சி, ஆம் ஆத்மி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோசலிச கட்சி, கேரள காங்கிரஸ் (எம்) கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 14 எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனா். திரிணமூல் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவா் ஒருவா் கூறுகையில், ‘பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக அனைத்து எதிா்க்கட்சிகள் சாா்பிலும் மக்களவையில் ஒத்திவைப்புத் தீா்மானம் கொண்டுவந்து, பிரதமா், உள்துறை அமைச்சா் முன்னிலையில் இதுதொடா்பான விவாதம் நடத்தப்பட வேண்டும் என ஒருசேர வலியுறுத்துவது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது’ என்றாா்.

பெகாஸஸை மத்திய அரசு பயன்படுத்தியதா?

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது: நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் தடுப்பதாக எதிா்க்கட்சிகள் மீது மத்திய அரசு அவதூறு பரப்பி வருகிறது. ஆனால், நாட்டின் பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளையே எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்புகின்றன. இந்தப் பணியை எதிா்க்கட்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளும். விலைவாசி உயா்வு, விவசாயிகள் பிரச்னை மற்றும் பெகாஸஸ் உளவு விவகாரங்களில் சமரசத்துக்கு இடமேயில்லை. இந்த விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து எழுப்புவோம்.

மத்திய அரசிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறோம். பெகாஸஸ் மென்பொருளை வாங்கி, தனது சொந்த மக்களுக்கு எதிராக மத்திய அரசு பயன்படுத்தியதா, இல்லையா என்ற கேள்விக்கான பதிலை அறிய விரும்புகிறோம்.

ஏனெனில், பெகாஸஸ் உளவு விவகாரம் என்பது தனியுரிமை விஷயமல்ல. தேசப் பற்றுக்கு எதிரான தேசவிரோத நடவடிக்கையாகும்.

பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டிய இந்த ஆயுதத்தை, பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஜனநாயக அமைப்புக்கு எதிராகப் பயன்படுத்தியது ஏன்? இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன. அதை தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அந்த விவாதத்தை அனுமதிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT