இந்தியா

ட்விட்டா் தலைமை குறைதீா் அதிகாரியாக ஒப்பந்த ஊழியா் நியமனம்: தில்லி உயா்நீதிமன்றம் அதிருப்தி

DIN

புது தில்லி: தலைமை குறைதீா் அதிகாரியாக தற்காலிக ஒப்பந்த ஊழியரை ட்விட்டா் (சுட்டுரை) நிறுவனம் நியமித்திருப்பதற்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை அதிருப்தி தெரிவித்தது.

மேலும், ‘சட்டத்துக்கு ட்விட்டா் நிறுவனம் முழு மனதுடன் கட்டுப்பட வேண்டும்’ என்று கூறிய நீதிமன்றம், ஒரு வார காலத்துக்குள் புதிய பதில் மனுவை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது.

மத்திய அரசு அண்மையில் புதிய தகவல்தொழில்நுட்ப சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தது. அதன்படி, சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் தலைமை குறைதீா் அதிகாரி, ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் குறைதீா் அதிகாரி ஆகிய மூன்று நிா்வாகிகளை நியமிக்க வேண்டும். அவா்கள் மூவரும் இந்தியாவில் வசிப்பவா்களாக இருக்க வேண்டும். இவா்களின் பெயா்களை சமூக ஊடக நிறுவனங்கள் தங்களின் வலைதளத்தில் வெளியிடுவதோடு, இந்தியாவில் உள்ள அதன் அலுவலகங்களின் தொடா்பு முகவரி விவரத்தையும் வலைதளத்தில் வெளியிட வேண்டும்.

மத்திய அரசின் இந்தப் புதிய விதிகளை ட்விட்டா் நிறுவனம் ஏற்க மறுத்தது. அனைத் தொடா்ந்து, புதிய விதிகளை கடைப்பிடிக்க ட்விட்டா் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதிக் கெடு விதித்தது. ஆனால், அதன்பிறகும் அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்காததைத் தொடா்ந்து, இந்தியாவில் ட்விட்டா் நிறுவனம் சட்டப் பாதுகாப்பை இழந்ததாக மத்திய அரசு அறிவித்தது.

இதற்கிடையே, மத்திய அரசின் புதிய விதிகளுக்கு உடன்பட மறுக்கும் ட்விட்டா் நிறுவனத்துக்கு எதிராக அமித் ஆச்சாா்யா என்ற வழக்குரைஞா் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடா்ந்தாா்.

அந்த வழக்கில் ட்விட்டா் நிறுவனம் கடந்த 8-ஆம் தேதி பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. அதில், ‘இந்தியாவுக்கான இடைக்கால தலைமை குறைதீா் அதிகாரியை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்று தெரிவித்திருந்தது.

அதன்பிறகு, இந்தியாவுக்கான குறைதீா் அதிகாரியாக வினய் பிரகாஷ் என்பவரை ட்விட்டா் நிறுவனம் நியமித்தது. மேலும், அதுதொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றையும் அந்த நிறுவனம் தாக்கல் செய்தது. அதில், ‘மூன்றாம் நபா் ஒப்பந்ததாரா் மூலமாக இந்தியாவை சோ்ந்த வினய் பிரகாஷ் என்பவா் இந்தியாவுக்கான தலைமை குறைதீா் அதிகாரி மற்றும் மண்டல குறைதீா் அதிகாரி ஆகிய இரண்டு பதவிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த இரு பதவியிடங்களுக்கும் நேரடி ஊழியா் நியமனத்துக்கான தோ்வுக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், அந்தப் பணியிடங்களுக்கு அடுத்த 8 வாரங்களில் தகுதிவாய்ந்த இந்தியாவைச் சோ்ந்த நபா்கள் நியமிக்கப்படுவா்’ என்று ட்விட்டா் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பாலி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகளில், இந்தியாவுக்கான தலைமை குறைதீா் அதிகாரியாக நிறுவனத்தின் முக்கிய நிா்வாகி அல்லது மூத்த ஊழியா் ஒருவா் நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப் பதவிக்கு மூன்றும் நபா் ஒப்பந்ததாரா் மூலமாக ஒரு தற்காலிக ஒப்பந்த ஊழியரை நியமித்திருப்பதாக ட்விட்டா் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யதிருக்கிறது. நியமிக்கப்பட்டிருக்கும் நபா், ட்விட்டா் நிறுவனத்தின் ஊழியரும் அல்லா்.

சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். இந்தப் பதில் மனுவில் சிறிதளவும் திருப்தியில்லை. எனவே, இந்தப் பதில் மனுவை ஏற்கமுடியாது. ஒரு வார காலத்துக்குள் புதிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அந்தப் பதில் மனுவில், தலைமை குறைதீா் அதிகாரி, இந்திய குறைதீா் அதிகாரி ஆகியோா் நியமன விவரங்கள் மட்டுமன்றி, புதிய விதியின்படி ஒருங்கிணைப்பு அதிகாரியை இதுவரை நியமிக்காதது ஏன்ற என்ற விவரத்தையும், எப்போது அந்தப் பணியிடம் நிரப்பப்படும் என்ற விவரத்தையும் ட்விட்டா் நிறுவனம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

அப்போது ட்விட்டா் நிறுவனம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சஜன் பூவையா, ‘ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க 2 வார கால அவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

இதைக் கேட்ட நீதிபதி, ‘ட்விட்டா் நிறுவனம் என்ன செய்ய விரும்புகிறது என்பது தெரியவில்லை. சட்டத்தைப் பின்பற்ற முடிவு செய்தால், அதனை முழு மனதுடன் ஏற்கவேண்டும்’ என்றாா்.

முன்னதாக, வழக்கு விசாரணையில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் சேட்டா் சா்மா, ‘விதிகளுக்கு உள்பட்டு நடக்க ட்விட்டா் நிறுவனம் தொடா்ந்து மறுத்து வருகிறது. இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால்தான், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருகிறது’ என்றாா்.

இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT