இந்தியா

கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு

29th Jul 2021 05:29 AM

ADVERTISEMENT

 


பெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
2019-இல் கர்நாடகத்தின் முதல்வராகப் பதவியேற்ற பி.எஸ். எடியூரப்பா, கடந்த ஜூலை 26-இல் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பாஜக மேலிடத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை பசவராஜ் பொம்மை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்று, ஆட்சியமைக்க பசவராஜ் பொம்மைக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
பதவியேற்பு: ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் புதன்கிழமை காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில், கர்நாடகத்தின் 23-ஆவது முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட்  பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். கன்னட மொழியில் கடவுளின் பெயரால் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். புதிய முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பங்கேற்பு: விழாவில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜி.கிஷண் ரெட்டி, பாஜக மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங், பாஜக மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் துணை முதல்வர்கள் கோவிந்த் கார்ஜோள், லட்சுமண்சவதி, அஸ்வத்நாராயணா, கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆர். அசோக், முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்குமார், அரவிந்த் லிம்பாவளி, முருகேஷ் நிரானி, மாதுசாமி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, மஜத எம்எல்ஏ  ஏ.டி.ராமசாமி, பசவராஜ் பொம்மையின் மனைவி சென்னம்மா, மகன் பாரத், மகள் அதிதி உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவில் காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
எடியூரப்பாவிடம் ஆசி: முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்னதாக பாலப்ரூஹி விருந்தினர் மாளிகைக்கு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று பசவராஜ் பொம்மை சுவாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு காவிரி இல்லம் சென்று எடியூரப்பாவை  சந்தித்து ஆசி பெற்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT