இந்தியா

கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் பசவராஜ் பொம்மை

28th Jul 2021 11:03 AM

ADVERTISEMENT

கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மைக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசுப் பொறுப்புகளில் வாய்ப்பு அளிப்பதில்லை என்ற பாஜகவின் விதிமுறையை ஏற்று, கட்சி மேலிடத்தின் விருப்பத்துக்கு இணங்க கர்நாடக மாநில முதல்வர் பதவியை பி.எஸ்.எடியூரப்பா (78) திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

அதையடுத்து, புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பாஜக தேசியத் தலைமை ஈடுபடத் தொடங்கியது.

பாஜகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக மேலிடப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜி.கிஷண் ரெட்டி, மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் ஆகியோர் பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.

ADVERTISEMENT

பெங்களூரு கேபிடல் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு பாஜகவின் சட்டப்பேரவைக் குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எடியூரப்பா, நளின்குமார், அருண் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாஜக எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பாஜக சட்டப்பேரவைக் குழுவின் புதிய தலைவராக பசவராஜ் பொம்மை (61) பெயரை எடியூரப்பா முன்மொழிந்தார். அதனை கோவிந்த் கார்ஜோள் வழிமொழிந்தார். அதன்படி, பாஜக சட்டப்பேரவைக் குழுவின் புதிய தலைவராக பசவராஜ் பொம்மை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்த பசவராஜ் பொம்மை, பாஜகவின் பேரவைக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் தாவர்சந்த் கெலாட், புதிய முதல்வராகப் பதவியேற்க பசவராஜ் பொம்மைக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு கர்நாடகத்தின் 20-ஆவது முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்டார்.
 

Tags : Karnataka CM Basavaraj Bommai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT