இந்தியா

காவிரி ஆற்றில் ராசிமணல் பகுதியில் புதிய அணை: மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மனு

28th Jul 2021 03:49 AM

ADVERTISEMENT

தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ராசிமணல் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கும், இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக வழக்குரைஞர் யானை ஜி.ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
 மேக்கேதாட்டு அணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் பெங்களூரில் இருந்து 110 கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இந்த அணைப் பகுதியானது காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. இந்த அணை கட்டுமானமானது சுற்றுச்சூழல் மற்றும் நிதிரீதியில் எதிர்பார்த்த பலனை அளிக்காது. இந்த அணையைக் கட்டுவதற்கு தற்போதைய நிலையில் ரூ.9 ஆயிரம் கோடியை கர்நாடக மாநில அரசு அனுமதித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வள அமைச்சகத்திடம் இருந்து அந்த அரசு அனுமதி பெற்றிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு எதிராக தமிழகம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.
 இந்த அணைக்கான திட்டச் செலவு அதிகமானதாகும். மேலும், இந்தத் திட்டத்தால் ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்படும்; பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கும்; ஆயிரக்கணக்கான பழங்குடியினர் வெளியேற்றப்பட வேண்டியிருக்கும்.
 மேலும், இந்தத் திட்டத்தின் காரணமாக மேக்கேதாட்டு பகுதியில் உள்ள 7,800 ஏக்கர் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதி நீரில் மூழ்கும் சூழல் உள்ளது.
 அதேவேளையில், ராசிமணல் பகுதியில் ஓர் அணை கட்டுவதற்கு 1961-இல் முதல்வராக இருந்த காமராஜர் அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு வந்த அரசுகள் இந்தத் திட்டத்தை பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரியின் குறுக்கே அமையும் இந்த அணை கட்டப்பட்டால் 80 முதல் 100 டிஎம்சி நீரை சேமிக்க முடியும்; 750 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மேலும், மழைக் காலத்தின்போது கூடுதலாகக் கிடைக்கக்கூடிய நீர் மட்டுமே சேமிக்கப்படும். இந்த நீரை மேட்டூர் அணை வற்றும்போது திறந்துவிட முடியும்.
 மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் 4.75 டிஎம்சி நீரை பெங்களூரு குடிநீர்த் தேவைக்காக வழங்க முடியும் என்றும், 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும் கர்நாடகம் கூறி வருகிறது. ராசிமணல் பகுதியில் அணை கட்டப்பட்டால் பெங்களூருவுக்கு 10 டிஎம்சி நீரை வழங்க முடியும். 750 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ராசிமணல் மற்றும் பெங்களூரு இடையே சுமார் 140 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. மேகேதாட்டு பகுதியில் இருந்து கூடுதலாக 30 கிலோ மீட்டர் தூரத்தில்தான் ராசிமணல் அமைந்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் கூடுதலாக தண்ணீர் கிடைப்பதுடன் கூடுதலாக மின்சாரத்தையும் சேமிக்க முடியும். ராசிமணலில் அணை கட்டப்பட்டால் இரு மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தேச நலன், எதிர்கால தலைமுறையின் நலன் கருதி ராசிமணலில் அணை கட்டுவதற்கு மத்திய அரசுக்கும், கர்நாடக, தமிழக அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT