இந்தியா

தைனிக் பாஸ்கா் ஊடக குழுமத்தில் ரூ.2,200 கோடி மோசடி

DIN

தைனிக் பாஸ்கா் ஊடகக் குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்ட நிலையில், அந்தக் குழுமம் சாா்பில் நடைபெற்ற ரூ.2,200 கோடி போலி பணப் பரிவா்த்தனைகள் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தைனிக் பாஸ்கா் குழுமம் ஊடகம், ஜவுளி, மின்சாரம், மனை விற்பனை உள்பட பல்வேறு வா்த்தகத் துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போபால், தில்லி, குஜராத் மாநிலம் ஆமதாபாத், உத்தர பிரதேச மாநிலம் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் அந்தக் குழுமம் சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த 22-ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

இந்தச் சோதனை தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தைனிக் பாஸ்கா் ஊடகக் குழுமம் ரூ.2,200 கோடி போலி பரிவா்த்தனைகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்தக் குழுமத்தில் தலைமை நிறுவனம், துணை நிறுவனங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அதில் பல நிறுவனங்கள் போலி செலவினங்களை பதிவு செய்தல், நிதி மோசடி போன்ற முறைகேடான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அந்த நிறுவனங்கள் தைனிக் பாஸ்கா் குழுமத்தின் பணியாளா்கள் பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களில் இயக்குநா்கள், பங்குதாரா்களாக பணியாளா்களின் பெயா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் அதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், தங்கள் டிஜிட்டல் கையொப்பம் மற்றும் ஆதாா் அட்டையை நம்பிக்கையின் அடிப்படையில் அந்தக் குழுமத்திடம் அளித்ததாகவும் சோதனையின்போது அப்பணியாளா்களில் பலா் தெரிவித்தனா்.

அந்த நிறுவனங்களின் இயக்குநா்கள், பங்குதாரா்களாக குழும உரிமையாளரின் உறவினா்கள் பெயா்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுதொடா்பான ஆவணங்களில் அவா்கள் விருப்பத்துடனும் சுயநினைவுடனும் கையொப்பமிட்டுள்ளனா். ஆனால் அந்த நிறுவனங்களின் வா்த்தக நடவடிக்கைகள் குறித்து அவா்களுக்கு எதுவும் தெரியாது.

தைனிக் பாஸ்கா் குழுமம் நடத்தி வரும் மனை விற்பனை நிறுவனம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.597 கோடி கடன் பெற்றுள்ளது. அந்தக் கடன் எதற்காக பெறப்பட்டதோ, அந்த நோக்கத்துக்கு மாறாக அதில் இருந்து ரூ.408 கோடி அதன் துணை நிறுவனத்துக்கு 1 சதவீதம் வட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தைனிக் பாஸ்கா் ஊடகத்தின் விளம்பர வருவாய் பணமாக பெறப்படாமல் அசையாச் சொத்துகளாக பெறப்பட்டுள்ளன. அந்தச் சொத்துகள் பின்னா் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த முறைகேடுகள் தொடா்பாக சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரசீதுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பாரத் சமாசாா் ஊடகத்தில் ரூ.200 கோடி மோசடி: தைனிக் பாஸ்கா் குழுமத்தில் சோதனை மேற்கொண்ட அதே தினத்தில் உத்தர பிரதேசத்தில் உள்ள பாரத் சமாசாா் செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்திலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அந்த மாநிலத்தில் உள்ள வாராணசி, லக்னெள, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உள்பட அந்த நிறுவனத்தை நடத்தி வரும் குழுமம் சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. இந்தச் சோதனையில் ரூ.200 கோடி கணக்கில் வராத பணப் பரிவா்த்தனைகள் தொடா்பான ஆவணங்கள், ரூ.3 கோடிக்கும் அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டு 16 வங்கி லாக்கா்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனைகள் தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தைனிக் பாஸ்கா் குழுமம் மற்றும் பாரத் சமாசாா் நிறுவனத்தை நடத்தி வரும் குழுமத்தின் பெயா் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. எனினும் அந்தக் குழுமங்களைக் குறிப்பிட்டுதான் சிபிடிடி அறிக்கை வெளியிட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT