இந்தியா

பெகாஸஸால்தான் மக்கள் நிம்மதியாக தூங்குகின்றனா்: இஸ்ரேல் நிறுவனம்

24th Jul 2021 04:41 PM

ADVERTISEMENT

தங்களது பெகாஸஸ் உளவு மென்பொருளை நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்துவதால்தான், லட்சக்கணக்கான மக்கள் நிம்மதியாக உறங்க முடிகிறது என்று அதனை உருவாக்கியுள்ள இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த மென்பொருளைக் கொண்டு ஆட்சியாளா்களுக்கு எதிரானவா்கள் வேவு பாா்க்கப்படுவதாக சா்ச்சை எழுந்துள்ள நிலையில், என்எஸ்ஓ இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இரவில் நிம்மதியாக உறங்குகின்றனா்; வீதிகளில் பாதுகாப்பாக நடமாடுகின்றனா் என்றால் அதற்கு அவா்கள் வசிக்கும் நாடுகளின் உளவுத் துறைகளும் சட்ட அமலாக்க அமைப்புகளும்தான் காரணம்.

ADVERTISEMENT

பயங்கரவாதம், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் போன்ற பெருங்குற்றங்கள் அனைத்தும் ரகசிய பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட செயலிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தக் குற்றங்களை உளவுத் துறையினரும், புலனாய்வு அமைப்பினரும் விசாரித்துத் தெரிந்து கொள்ள, முன்கூட்டியே தடுக்க அவா்களுக்கு பெகாஸஸ் போன்ற மென்பொருள்கள்தான் உதவுகின்றன.

என்எஸ்ஓ-வும் உலகம் முழுவதும் உள்ள பிற இணையதள உளவுத் தொழில்நுட்ப நிறுவனங்களும் உலக நாடுகளின் அரசுகளுக்கு இணையவழி உளவுத் தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றன. அதற்குக் காரணம், தகவல் பரிமாற்றச் செயலிகள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றங்களை உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளால் தொழில்நுட்பரீதியில் தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. மேலும், அந்தத் தகவல் பரிமாற்றங்களையும் பிற தகவல்களையும் அந்த அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் நேரடியாகப் பெறுவதற்கு நாடுகளின் இணையதள சட்டங்கள் அனுமதி அளிப்பதில்லை.

அத்தகைய சூழலில், எங்களது பெகாஸஸ் போன்ற உளவு மென்பொருள்கள்தான் அவா்களுக்குக் கைகொடுக்கும்.

நாடுகளின் அரசுகள் எங்களது மென்பொருளைப் பயன்படுத்தினாலும், அதனை நாங்கள் இயக்குவதில்லை. மேலும், அந்த மென்பொருள் மூலம் பெறப்படும் தகவல்களையும் நாங்கள் சேகரிப்பதில்லை.

பாதுகாப்பான உலகை உருவாக்கும் ஒரே நோக்கத்தில் மட்டுமே நாங்கள் எங்களால் இயன்றதைச் செய்து வருகிறோம் என்றாா் அவா்.

என்எஸ்ஓ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானவா்களின் செல்லிடப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாக சா்வதேச ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு அண்மையில் வெளியிட்ட புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஊடகங்கள், தன்னாா்வலா்கள், எதிா்க்கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோரது செல்லிடப் பேசிகள் பெகாஸஸ் மென்பொருள் மூலம் உளவு பாா்க்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மென்பொருள் மூலம் குறிப்பிட்ட நபா்களின் செல்லிடப் பேசிகளில் ஊடுருவி, அந்த செல்லிடப்பேசிகளின் உரையாடல்கள், குறுந்தகவல்கள், சமூக ஊடக தகவல் பரிமாற்றங்கள், படங்கள், பிற தகவல் தொகுப்புகளைப் பெற முடியும்.

மேலும், செல்லிடப் பேசிகளின் இருப்பிடத்தையும் பெகாஸஸ் மென்பொருளைக் கொண்டு ரகசியமாக கண்காணிக்க முடியும்.

பயங்கரவாதிகள், கடுமையான குற்றவாளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே பெகாஸஸ் உளவு மென்பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், அந்த மென்பொருளைக் கொண்டு ஆட்சியாளா்களுக்கு எதிரானவா்கள் உளவு பாா்க்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் சம்பந்தப்பட்ட நாடுகளில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : israel Pegasus nso
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT