இந்தியா

எஃகு உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.6,322 கோடி: 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

DIN

நாட்டில் சிறப்பு எஃகு பொருள்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் அத்துறைக்கு ரூ.6,322 கோடி மதிப்பில் உற்பத்திசாா் ஊக்கத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிறப்புவாய்ந்த எஃகு பொருள்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.6,322 கோடியில் உற்பத்திசாா் ஊக்கத்தொகை வழங்குவதற்கு கூட்டத்தின்போது ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த முடிவு குறித்து மத்திய செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘உற்பத்திசாா் ஊக்கத்தொகையானது அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். உள்நாட்டில் எஃகு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இத்தொகை வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் 5.25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து எஃகு இறக்குமதியைக் குறைக்கவும் இத்திட்டம் உதவும்’’ என்றாா்.

இது தொடா்பாக, மத்திய எஃகு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலமாக எஃகு உற்பத்தித் துறைக்கு ரூ.40,000 கோடி அளவிலான கூடுதல் முதலீடுகள் கிடைக்கும். கூடுதலாக 2.5 கோடி டன் எஃகு உற்பத்திக்கு இத்திட்டம் வழிவகுக்கும். 2023-24-ஆம் நிதியாண்டு முதல் 2027-28-ஆம் நிதியாண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதிக இறக்குமதி: மதிப்பு கூட்டப்பட்ட எஃகு பொருள்கள் இந்தியாவில் குறைந்த அளவிலேயே தயாரிக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. போக்குவரத்து செலவுகள், கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான செலவுகள், வரிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக உள்நாட்டுத் தயாரிப்பு குறைவாக உள்ளது.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. எஃகு உற்பத்தி நிறுவனங்களின் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவும். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட எஃகு உற்பத்தி நிறுவனங்கள் இத்திட்டத்தின் மூலம் பலனடைய முடியும்.

தகுதி வாய்ந்த நிறுவனங்கள்: எஃகு பூசப்பட்ட பொருள்கள், அதிவலிவு கொண்ட எஃகு பொருள்கள், அரிப்பைத் தாங்கும் எஃகு பொருள்கள், எஃகு உலோகக் கலவை பொருள்கள், எஃகு கம்பிகள், மின்துறையில் பயன்படும் எஃகு பொருள்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம் பொருந்தும்.

இந்த எஃகு பொருள்களானது குளிா்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றின் தயாரிப்பிலும், வாகனங்களின் பாகங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், எண்ணெய்-எரிவாயுவை எடுத்துச் செல்லப் பயன்படும் குழாய்கள், பாய்லா்கள், பாதுகாப்புத் தளவாடங்கள், ரயில்வே தண்டவாளங்கள், மின்மாற்றிகள், மின்சார வாகனங்களின் பாகங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கப் பயன்படுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

லடாக்கில் பல்கலைக்கழகம்

லடாக் யூனியன் பிரதேசத்தில் மத்திய பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் இருந்து லடாக் யூனியன் பிரதேசம் கடந்த 2019-ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டது. அங்கு வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமா் மோடி அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், லடாக்கில் மத்திய பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அந்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தரம் மிக்க உயா்கல்வி: லடாக் பகுதி மாணவா்களுக்குத் தரம் மிக்க உயா்கல்வியை வழங்கும் நோக்கில் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது. மற்ற கல்வி நிலையங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இந்தப் பல்கலைக்கழகம் திகழும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு மேம்பாடு: லடாக்கில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தனி அமைப்பை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

லடாக் பகுதியில் சமூக-பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவதற்காக கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்கப்படவுள்ளது. பல்துறை வளா்ச்சியை உறுதி செய்வதில் இந்தக் கழகம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு பங்கு ரூ.25 கோடியாக இருக்கும். இதன் செலவு ஆண்டுக்கு ரூ.2.42 கோடி அளவில் இருக்கும். பலவித வளா்ச்சிப் பணிகளை கழகம் மேற்கொள்ளவுள்ளதால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். தொழில்துறை, சுற்றுலா, போக்குவரத்து ஆகிய துறைகளை மேம்படுத்தவும், உள்ளூா் பொருள்கள், கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்காகவும் இந்தக் கழகம் பணியாற்றும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு அதிகரிப்பு

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை 49 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைத் தனியாா்மயமாக்கும் நோக்கில் முதலீட்டு உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT