இந்தியா

பெகாசஸ் ஸ்பைவேர் குறித்த கட்டுரை ஜனநாயகத்துக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி: மத்திய அமைச்சர்

19th Jul 2021 04:08 PM

ADVERTISEMENT


பெகாசஸ் ஸ்பைவேர் குறித்து வெளியான கட்டுரை இந்திய ஜனநாயகத்துக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி நாடாளுமன்றத்தில் அவர் பேசியது:

"ஒரு இணைய செய்தி நிறுவன தளத்தில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) மிகவும் பரபரப்பான செய்திக் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. இந்தக் கட்டுரை குறித்து நிறைய மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு ஒரு தினம் முன்பு இந்த செய்திகள் வெளியாகின்றன. இவை தற்செயலாக நிகழ்ந்ததல்ல.

வாட்ஸ் ஆப்பில் பெகாசஸ் பயன்பாடு குறித்து கடந்த காலங்களிலும் இதுபோன்று குற்றம்சாட்டப்பட்டது. அந்த அறிக்கைகளில் எவ்வித உண்மையும் இல்லை. அனைத்துக் கட்சிகளும் அதை மறுத்தன. ஊடகங்களில் ஜூலை 18, 2021-இல் வெளியான செய்திகளும் இந்திய ஜனநாயகத்துக்கும், நன்கு பெயர் பெற்ற அதன் அமைப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் முயற்சியே."

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், கேபினட் அமைச்சர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரது செல்லிடப்பேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக தி வயர் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது. ஒட்டுக்கேட்கப்பட்டவர்கள் பட்டியலில் 40 இந்திய ஊடகவியலாளர்கள் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமானது. 

ADVERTISEMENT

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியதையடுத்து, எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளனர். 

இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினாய் விஸ்வம், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் நாடாளுமன்றத்தில் மற்ற நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT