இந்தியா

பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்: ராகுல் காந்தி

19th Jul 2021 03:35 PM

ADVERTISEMENT


ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரியும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ளதாகத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "நமது தேசத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ளது. பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரத்தை நிச்சயம் அவையில் எழுப்புவேன்" என்றார்.

இதனிடையே, பெகாசஸ் ஸ்பைவேர் குறித்து விவாதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினாய் விஸ்வம், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் நாடாளுமன்றத்தில் மற்ற நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், கேபினட் அமைச்சர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரது செல்லிடப்பேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக தி வயர் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது. ஒட்டுக்கேட்கப்பட்டவர்கள் பட்டியலில் 40 இந்திய ஊடகவியலாளர்கள் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமானது. 

ADVERTISEMENT

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியதையடுத்து, எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளனர். இதுகுறித்து கேள்வியெழுப்பியபோதும், பெகாசஸ் ஸ்பைவேர் நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என அவர் தெரிவித்தார்.

Tags : rahul gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT